Published : 11 Jun 2022 06:14 AM
Last Updated : 11 Jun 2022 06:14 AM

தமிழக ஆளுநர் 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் வைத்திருப்பது சரியில்லை: ப.சிதம்பரம் கருத்து

ப.சிதம்பரம்

காரைக்குடி: தமிழக ஆளுநர் 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் வைத்திருப்பது சரியில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகியிருப்பதால் தமிழக அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் எதிர்பார்ப்பாக உள்ளது.

காங்கிரஸில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதை வரும் 2024 மக்களவைத் தேர்தலில் அமல்படுத்த முடிவாகியுள்ளது. கட்சி பொறுப்புகளிலும் இளைஞர்களுக்கு 50 சதவீதம் இடம் தரப்படும். தேர்தல் வரும்போதுதான் வயது உச்ச வரம்பு அமல்படுத்தப்படும்.

இன்றைய தேதியில் அது பொருந்தாது. நான் முன்பே அரசியலுக்கு வந்து விட்டேன். நான் விலகுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. காங்கிரஸில் மட்டும் தான் வாரிசு அரசியல் உள்ளது என்பது ஒரு கற்பனை. பாஜகவிலும் வாரிசு அரசியல் உள்ளது. அந்த நிலை மாற வேண்டும். அது மாறும். ஆதீனங்கள் அரசியலில் தலையிடக் கூடாது. அரசும் ஆன்மி கத்தில் தலையிடக் கூடாது.

தமிழக அரசு கடந்த ஓராண்டில் தவறான முடிவு எதையும் எடுக்கவில்லை. முதல்வர் ஒவ்வொரு முடிவையும் நிதானமாக எடுக்கிறார். உள்நாட்டு நிர்வாகத்தில் மத்திய அரசு முற்றிலும் தோற்று விட்டது. பண வீக்கம் 7.5 சதவீதமாக உள்ளது. இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் சீன ஆக்கிர மிப்பு உள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை கூறுகிறது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்று பிரதமர் சொல்கிறார்.

அமலாக்கத்துறை சம்மன் என்பது எதிர்க்கட்சிகள் அனைத் துக்கும் பொருந்தும், பாஜகவுக்கு பொருந்தாது என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.

தமிழக ஆளுநர் 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் வைத்திருப்பது சரியில்லை. ஆளுநர்கள் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது எம்எல்ஏ மாங்குடி உடன் இருந்தார்.

ஆதீனங்கள் அரசியலில் தலையிடக் கூடாது. அரசும் ஆன்மிகத்தில் தலையிடக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x