Published : 29 May 2016 01:33 PM
Last Updated : 29 May 2016 01:33 PM

புதுச்சேரியில் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: நாராயணசாமி உறுதி

'தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்' என்று புதுச்சேரிக்கு புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாராயணசாமி உறுதி அளித்திருக்கிறார். பதவியேற்கும் தேதி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் மேலிடப்பார்வையாளர்கள் நேற்று புதுச்சேரிக்கு வந்தனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 15பேரும் பங்கேற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவராக நாராயணசாமி தேர்வானார். இதையடுத்து புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி பதவியேற்பது உறுதியானது.

இக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:

புதுச்சேரியில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எனது பெயரை முன்மொழிந்த நமச்சிவாயம், வழிமொழிந்த வைத்திலிங்கம் ஆகியோருக்கும். எம்.எல்.ஏக்களுக்கும், கட்சித் தலைமைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்எல்ஏக்களுடன் கலந்து பேசி பதவியேற்பு தேதி இறுதி செய்யப்பட்டும். தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சி அமைக்க விரைவில் துணைநிலை ஆளுநரை சந்தித்து உரிமை கோருவோம். காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் தேதி, யார் யார் அமைச்சர்கள் என்பது குறித்து எம்.எல்.ஏக்களுடன் கலந்து முடிவு செய்யப்படும்.

கூட்டணிக் கட்சியான திமுகவை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமையுடன் பேசப்படும்.

புதுச்சேரியில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முன்னுரிமை தரப்படும். மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு தீவிரமாக பாடுபடுவேன் என்று குறிப்பிட்டார்.

'ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து எதற்கு?' என்று கேட்டதற்கு, "முதல் கையெழுத்து பற்றி விரைவில் தெரிவிப்போம்" என்றார்.






Sign up to receive our newsletter in your inbox every day!

 
x