Published : 01 May 2016 10:45 AM
Last Updated : 01 May 2016 10:45 AM

வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்தது: தமிழகம் முழுவதும் 4,600 மனுக்கள் ஏற்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7,149 வேட்புமனுக்களில் 4,600 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2,549 மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் 29-ம் தேதி மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. அன்று இரவு நிலவரப்படி 7,149 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. 2 தொகுதிகளுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர்கள் மனுக்கள் பரிசீலனையை கண் காணித்தனர். மனுக்கள் பரிசீலனை நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.

பார்வையாளர்கள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதி களில் ஒன்றில் நேரடியாக கண்காணித்தனர். மற்ற தொகுதி யின் வீடியோ பதிவு களை பார்த்து உறுதி செய்து கொண்டனர்.

அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் 2 மனுக் களையும், சிலர் 4 மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர். இவற் றில் குறைகள் இல்லாத மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு, மற்ற மனுக்களை தள்ளுபடி செய்தனர். இதேபோல, குறைகள் காணப்பட்ட பல வேட்பாளர் களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. தேர்தல் நடைமுறை சட்டத்தின்படி, மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான கார ணத்தை வேட்பாளர் அல்லது முகவரிடம் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நட்சத்திர வேட்பாளர்களை பொறுத்தவரை, முதல்வர் ஜெய லலிதா (ஆர்.கே.நகர்), திமுக தலைவர் கருணாநிதி (திருவாரூர்), திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் (கொளத்தூர்), தேமுதிக தலைவர் விஜயகாந்த் (உளுந் தூர்பேட்டை), சமக தலைவர் சரத்குமார், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் (பென்னாகரம்), விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன் (காட்டுமன்னார் கோவில்), பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா (தி.நகர்), தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் (விருகம்பாக்கம்) ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டன.

தூத்துக்குடி, திருச்செந்தூர், ராமநாதபுரம் தொகுதிகளில் பாமக பிரதான வேட்பாளர்கள் சேஷய்யா பர்னாந்து, உத்தர்சிங், அப்துல் லத்தீப் ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பாமக சார்பில் மனு தாக்கல் செய்திருந்த மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இறுதி நிலவரப்படி, தாக்கல் செய்யப்பட்ட 7,149 மனுக்களில் 4,600 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2,549 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் 2-ம் தேதி (நாளை) மாலை 3 மணிக்குள் மனுவை வாபஸ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 3 மணிக்கு பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x