

கரூர்: கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு ரூ.1.50 கோடியில் சொந்தக் கட்டிடம் விரைவில் கட்டப்படவுள்ளது.
கரூர் மாவட்டத்தில் 1998-ல் மாவட்ட அரசு இசைப் பள்ளி தொடங்கப்பட்டது. ஜவஹர் பஜாரில் உள்ள வாடகைக் கட்டிடத்தில் கடந்த 24 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய இசைப் பயிற்சிகள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. இலவச தங்கும் விடுதி வசதியும் உண்டு.
இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை 60-லிருந்து 70 பேர் வரை பயின்று வந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக கடந்தாண்டு மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை 44 ஆகக் குறைந்தது. நிகழாண்டில், மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு இசைப் பள்ளியும், விடுதியும் வாடகைக் கட்டிடத்தில் செயல்படும் நிலையில், சொந்தக் கட்டிடம் கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து, சொந்தக் கட்டிடம் கட்ட தாந்தோணிமலையில் உள்ள மாவட்ட தொழில் மையம் அருகே முதலில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த இடம் கைவிடப்பட்டு, தற்போது புலியூர் உப்பிடமங்கலம் சாலையில், திருச்சி பிரிவு சாலையில் 65 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு ரூ.1.50 கோடியில் சொந்தக் கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதனால், கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளி, தனது வெள்ளி விழா ஆண்டில் சொந்தக் கட்டிடத்துக்கு இடம் மாறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட அரசு இசைப் பள்ளி முதல்வர் நா.ரேவதி கூறும்போது, “மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. 6 அல்லது 7 மாதங்களில் பணிகள் முடிந்துவிடும். அடுத்தாண்டிலிருந்து சொந்தக் கட்டிடத்தில் அரசு இசைப் பள்ளி செயல்படும்” என்றார்.