Published : 11 Jun 2022 06:02 AM
Last Updated : 11 Jun 2022 06:02 AM

பழங்குடி இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காமல் கோட்டாட்சியர்கள் தட்டிக்கழிப்பது ஆரோக்கியமாக இல்லை: அமைச்சர் எ.வ.வேலு கண்டிப்பு

முதல்வர் வருகையின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பேசும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. அருகில், ஆட்சியர் பா.முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் கே.கார்த்திகேயன் உள்ளிட்டோர். படம்:இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: பழங்குடி இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காமல் கோட்டாட்சியர்கள் தட்டிக் கழிப்பது ஆரோக்கியமாக இல்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் வருகையின் முன்னேற்பாடுகள் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க, தி.மலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வருகை தர உள்ளார். அவரது வருகை குறித்த தேதி, ஓரிரு நாட்களில் உறுதி செய்யப்படும். 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கவுள்ளார்.

860 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் 4 நகராட்சிகள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்களும் ஆட்சியருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.

பயனாளிகள் அனைவருக்கும், அதே இடத்தில் நலத்திட்ட உதவி களை வழங்கிய பிறகுதான், அவர்களை திரும்ப அழைத்து செல்ல வேண்டும். அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள், வீட்டுக்கு வந்து கொடுக்கிறோம் என அதிகாரிகள் சொல்லக்கூடாது.

தி.மலை மாவட்டத்தில் பழங்குடி இன மக் களுக்கு ஜாதி(எஸ்டி) சான்றிதழ் வழங்குவது இல்லை என சொல்லப்படுவது ஆரோக்கியமாக இல்லை. எஸ்டி சான்றிதழை கோட்டாட்சியர்கள் தான் வழங்க வேண்டும். ஆனால், அவர்கள் நமக்கு எதற்கு பிரச்சினை என தட்டிக் கழிக்கிறார்கள். நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடி இன மக்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களது குறைகளை கேட்டறிந்து முதல்வர் நிறைவேற்றுகிறார்.

எனவே, பழங்குடி இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதில் கூடுதல் கவனம் மற்றும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வருவாய்த் துறை மூலம் 469 நபர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், பழங்குடியின ஜாதி சான்றிதழ் பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகம் இருக்க வேண்டும். அதனை முதல்வர் முன்னிலையில், நான் குறிப்பிட்டு பேசுவேன்.

மயான பாதைக்கு தீர்வு

நவீன உலகில் மயானத்துக்கு பாதை இல்லாமல் இருப்பது கொடுமை. இதில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மயானங்களுக்கு பாதை இல்லாமல் இருப்பதுதான் அதிகம். நிலம் கையகப்படுத்துவதற்கான நிதியை பெற்றுத் தருகிறேன்.

மயான பாதை பிரச்சினை ஒழிக்கப்பட வேண்டும். வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் முகாமை நடத்திட வேண்டும்” என்றார்.

முன்னதாக, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டன. இதில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ஆட்சியர் பா.முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் கே.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x