Published : 11 Jun 2022 06:00 AM
Last Updated : 11 Jun 2022 06:00 AM

வீடில்லாதவர்களுக்கு வீடுகள் வழங்க தமிழக அரசு முனைப்பு: அமைச்சர் துரைமுருகன் தகவல்

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு பணி ஒதுக்கீடு ஆணையை வழங்கிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். அருகில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், எம்எல்ஏ கார்த்திகேயன், துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்டோர்.

வேலூர்: வீடில்லாமல் உள்ள மக்களுக்கு வீடுகளை வழங்க தமிழக அரசு முனைப்பாக இருக்கிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாங்களாகவே வீடு கட்டிக்கொள்ள பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், குளவிமேடு மற்றும் கன்னிகாபுரம், டோபிகானா பகுதி-1, பகுதி-2 திட்டப்பகுதிகளில் பயனாளிகள் பங்களிப்பு தொகை செலுத்திய 30 பேருக்கு வீடுகள் ஒதுக்கீட்டு ஆணை மற்றும் தாங்களாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள 104 பயனாளிகளுக்கு ரூ.218.40 லட்சம் மானியத்துடன் பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பயனாளிகளுக்கு பணி ஆணைகள் மற்றும் வீடுகள் ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கி பேசும்போது, ‘‘தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் நலன் காக்க பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருவதால் தமிழகத்தில் சமுதாய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட நாட்டுக்கு முன்னோடியான திட்டங்களை எல்லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறது.

இதனால், ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகிறார்கள். குறிப்பாக, வீடில்லாமல் உள்ள மக்களுக்கு வீடுகளை வழங்க தமிழக அரசு முனைப்பாக இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம்

நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.4.76 கோடி மதிப்பில் 52 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, சட்டப் பேரவைஉறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), வில்வநாதன் (ஆம்பூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து 52 பயனாளிகளுக்கு குடியிருப்பு களுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் நகராட்சி துணைத்தலைவர் சபியுல்லா, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலுார் கோட்ட உதவி செயற்பொறியாளர் வையாபுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குழந்தை தொழிலாளர் உறுதிமொழி

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது தொடர்பான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் நேற்று ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், கலால் உதவி ஆணையர் பானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள 369 பயனாளி களுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.7.75 கோடி மதிப்பீட்டிலான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ் வரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x