Published : 10 Jun 2022 08:44 PM
Last Updated : 10 Jun 2022 08:44 PM

“வல்லமை மிக்க திட்டத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது” - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பண்ணையை பார்வையிட்டார்.

சென்னை: “அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது” மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரியில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பண்ணையை இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் பார்வையிட்டார்.அவரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி வரவேற்றார்.

தொடர்ந்து பண்ணையில் உள்ள கால்நடைகள் , அதற்கான உணவுப் பயிர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் காங்கேயம் வகை உள்ளிட்ட உயர் வகை காளைகள் வளர்க்கும் மையத்தை பார்வையிட்டு அங்குள்ள கால்நடைகள் வளர்ப்பு முறைகள், இன பெருக்கம், விந்து உற்பத்தி மற்றும் உறை விந்து வங்கி, குளிர் பதன சேமிப்பு மையங்களை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இணையமைச்சர் எல்.முருகன், "மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகள் இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பயனாளிகளுக்கு இடைத்தரகர்கள் இன்றி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வழியாக அரசின் திட்டங்கள் மக்களைச் சென்று சேர்ந்துள்ளது.

ஏழை மக்கள் பயன்பெறும்வகையில் ஜன் தன் வங்கிக் கணக்கு, விவசாயிகள் கெளரவ நிதி, இலவச எரிவாயு இணைப்பு, சுகாதாரமான குடிநீர், கழிப்பிடங்கள், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு உள்பட பல்வேறு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

நாட்டில் கப்பல் போக்குவரத்து, விண்வெளி என அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு தான் மீன் வளத்துறைக்கு ஒரு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக மீன்வளத் துறைக்கு மொத்தம் ரூ. 4 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்துள்ள நிலையில், 2015-ம் ஆண்டிலிருந்து 2022-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ரூ.32 ஆயிரம் கோடி இந்தத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை காசிமேடு துறைமுகம் உலக அளவில் நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்,

அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 100-வது ஆண்டு சுதந்திர தினத்தில் நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற உலக அளவில் ஒரு வல்லமை மிக்க திட்டத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது" என்று எல்.முருகன் தெரிவித்தார்

முன்னதாக நாமக்கலில் நடந்த நிகழ்வில், மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கும் கையேட்டை மத்திய இணையமைச்சர் எல். முருகன் வெளியிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x