Published : 11 May 2016 02:18 PM
Last Updated : 11 May 2016 02:18 PM

அரக்கோணம் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி

தேர்தல் பிரச்சாரத்துக்காக அரக்கோணம் வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சித்த பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த களத்தூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் மணல் குவாரி ஏற்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, களத்தூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனால், அரசு மணல் குவாரி செயல்படவில்லை. இருப்பினும், மணல் குவாரிக்கு அனுமதி கொடுத்த அதிமுக அரசு மீது களத்தூர் கிராம மக்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சோளிங்கர் தொகுதி அதிமுக வேட்பாளர் பார்த்திபன் பிரச்சாரம் செய்ய வந்தபோது, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா அரக்கோணம் அடுத்த வேடல் பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையறிந்த களத்தூர் காலனி மக்கள் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த திரண்டனர்.

இதையறிந்த ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், ஆய்வாளர்கள் சந்திரசேகரன்(காவேரிப்பாக்கம்), முருகேசன்(பொன்னை) உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீஸார் களத்தூர் கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கருப்புக்கொடியுடன் காத்திருந்தவர்களை சுற்றி வளைத்து திருப்பி அனுப்பினர்.

அதிமுகவில் இணைந்தவர்கள்

அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா முன்னிலையில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஷீலா ராஜன், செந்தில்குமார், முன்னாள் கிராம ஊராட்சித் தலைவர் தினேஷ்குமார், வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சித் தலைவர் புருஷோத்தமன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கங்காதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அம்பேத்ராஜ், அமர்நாத், குடியாத்தம் தேமுதிக முன்னாள் ஒன்றியச் செயலாளர் பாபு, புதிய நீதிக்கட்சியைச் சேர்ந்த ரவிசங்கர், தமாகாவைச் சேர்ந்த துரை சண்முகம், திரைப்பட இயக்குநர்கள் சுரேஷ், செந்தில்குமார் மற்றும் சமூக சேவகியும் பாஜகவைச் சேர்ந்தவருமான திருநங்கை அப்சரா ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x