தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 45 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கோவை அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்டங்களை உதவிகளை வழங்கினார்.
அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கோவை அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்டங்களை உதவிகளை வழங்கினார்.
Updated on
1 min read

கோவை: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 45 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கோவையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த அரசு விழாவில் பங்கேற்ற தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது: ''கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ள மக்கள் பணி சார்ந்த குறைகளை தீர்ப்பதற்காக, தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, 24 மணி நேரமும் 7 நாட்களும் என்ற திட்டத்தின் கீழ், 94898 72345 என்ற உதவி எண் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் சாலை அமைத்தல், குடிநீர் வசதி, சாக்கடை தூர்வாருதல் உள்ளிட்ட தங்கள் பகுதியின் பொதுப் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள், இந்தத் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து புகார்களை தெரிவிக்கலாம். இந்தத்தொலைபேசி எண்ணுக்கு இதுவரை 8,407 புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் 4,637 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தொலைபேசி எண்ணின் அழைப்புகளில் பெறப்படும் புகார்கள் 21 துறைகளைச் சார்ந்த மாவட்ட உயர் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு விரைவாக தீர்வு காணப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இத்திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தின் போதோ, தேர்தல் வாக்குறுதிகளோ முழு மதுவிலக்கு எனக் கூறப்படவில்லை. தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 45 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. புதிய மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை. கடைகள் இடமாற்றம் மட்டுமே செய்யப்படுகின்றன. அப்பகுதி மக்கள் வேண்டாம் என்றால் அதனை நிறுத்திவிடலாம். கவுண்டம்பாளையம் மேம்பாலத்தை சிலர் தாங்களாகவே திறந்து கொள்வோம் எனக் கூறுகின்றனர்.

அரசு விதிகளை பின்பற்றாமல், இவ்வாறு தாங்களாகவே அதனைக் கையில் எடுத்துக் கொண்டால் அவர்கள் மீது வழக்குப் பதிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் நியாய விலைக் கடைகளில் சிலரது புகைப்படங்களை வைக்கின்றனர். இது தவறான நடவடிக்கை.

வாலாங்குளத்தில் தொடங்கப்பட உள்ள படகு சவாரிக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. சுற்றுலாத் துறை சார்பில் அந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடிதம் அனுப்பப்பட்டு, கட்டண குறைப்பிற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று அமைச்சர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in