சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை; இனிமேல் இந்த கேள்வியை கேட்காதீர்கள்: இபிஎஸ்

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை; இனிமேல் இந்த கேள்வியை கேட்காதீர்கள்: இபிஎஸ்
Updated on
1 min read

மயிலாடுதுறை: "சசிகலா அதிமுகவில் இடம்பெறவில்லை, கட்சியில் உறுப்பினரும் இல்லை. அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை. எனவே இந்த கேள்வியை தயவுகூர்ந்து இனிமேல் கேட்காதீர்கள்" என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மயிலாடுதுறை சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவைத் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தருமபுரம் ஆதீனத்தைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: " டிடிவி தினகரனை விட்டு விட்டோம், சசிகலாவை விட்டுவிட்டோம். பத்திரிகைகள்தான் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். டிடிவி தினகரன் ஒரு தனிக்கட்சியையே தொடங்கிவிட்டார்.

சசிகலா அதிமுகவில் இடம்பெறவில்லை. அதிமுகவில் உறுப்பினர் இல்லை. அவருக்கும் அதிமுகவும் சம்பந்தம் இல்லை. எனவே தயவுசெய்து இதுதொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டாம். பரபரப்பான செய்திக்காக இந்த கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது. அனைத்து நிருபர் கூட்டத்திலும் இதுகுறித்து பேசிவிட்டேன். எனவே இனிமேல் அந்த கேள்வியை கேட்க வேண்டாம்.

தமிழகத்தில் ஆளுங்கட்சி ஒன்றுதான் உள்ளது. மற்ற அனைத்து கட்சிகளுமே எதிர்கட்சிதான். ஆனால் பிரதான எதிர்கட்சி அதிமுகதான்" என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in