

'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்'என தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதிமொழி ஏற்குமாறு தமிழக தேர்தல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் அளிக்கப்படுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் புகார் அளித்து வருகின்றனர்.
இதையடுத்து, பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்று வாக்கா ளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் ஒரு கோடி பேர் ‘ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்’ என உறுதிமொழி ஏற்க தமிழக தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் தலா 50 வாக்காளர்கள் என்ற அளவில் தமிழகத்தில் உள்ள 66 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் இன்று உறுதிமொழி ஏற்கின்றனர்.
இதுதவிர மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவன அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உறுதிமொழி ஏற்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ராஜேஷ் லக்கானி தலைமையில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் இன்று காலை 10 மணிக்கு உறுதிமொழி ஏற்கின்றனர். மற்ற துறைகளிலும் துறை செயலர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்படுகிறது. இதற்காக தமிழக தேர்தல் துறையில் பிரிவு அலுவலராக இருக்கும் குமார் என்பவர், ’போடுவோம் ஓட்டு.. வாங்க மாட்டோம் நோட்டு’ என்ற வாசகத்தை உருவாக்கி அளித்துள்ளார்.