

உயரழுத்த ஆலைகளுக்கு மின் கட்டுப்பாடு தளர்வு அமலான முதல் நாள், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தொழிற்சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காததாலும், மின்துறை அதிகாரிகள் மின்வெட்டு இல்லாமல் நிலைமையை சமாளித்தனர். மின் கட்டுப்பாடு தளர்வால் சுற்றுச்சூழல் மாசு குறையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உயரழுத்த ஆலை களுக்கு விதிக்கப்பட்டிருந்த 20 சதவீத மின்சார கட்டுப்பாடும், இரவு நேர 90 சதவீத கட்டுப்பாடும், ஜூன் 1-ம் தேதி முதல் தளர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, தமிழகம் முழுவதும் ஜூன் 1-ம் தேதி முதல் மின் கட்டுப் பாடு தளர்வு அமலுக்கு வந்தது.
ஆனால் முதல் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெரும்பாலான தொழிற்சாலை களுக்கு வார விடுமுறை. இதே போல் அரசு அலுவலகங்களும் மற்றும் பல்வேறு தனியார் அலு வலகங்களும் விடுமுறையில் இருந்ததால், மின் கட்டுப்பாடு தளர்வு குறித்து முக்கியத்துவமான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால் திங்கள்கிழமை அதி காலை முதல் தொழிற்சாலைகள் இயங்கும்போதுதான், இதற்கான மாற்றங்கள் தெரியும். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களிலுள்ள பெரும் வணிக நிறுவனங்களும், பெரிய வணிக நிறு வனங்களுடன் கூடிய சினிமா தியேட்டர்களும் இந்த மின் கட்டுப் பாட்டிலிருந்து விலக்கு பெற்றுள் ளன. இவை ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு இன்றி தங்கள் நிறுவனங்களை இயக்கின.
மின் கட்டுப்பாடு அமலில் இருந்த போது, பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை மின்சாரம் இருந் தாலும், அவற்றை பயன்படுத்த முடியாமல் கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. இந்த நிறுவனங்கள் தினமும் டீசல் ஜெனரேட்டர்களை இயக்கி, மின்சாரம் உற்பத்தி செய்து வந்தன. தற்போது அதற்கு தேவையில்லை என்பதால், டீசல் விற்பனை கடுமையாக குறையும். அதேநேரம் டீசல் ஜெனரேட்டரால் ஏற்படும் ஒலி மற்றும் புகை மாசு குறையும் என்று மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, காலை நிலவரப்படி 273.67 மில்லி யன் யூனிட் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் உற்பத்தியான 10,494 மெகாவாட் மின்சாரத்தில், காற்றாலைகள் மூலம் 2032 மெகாவாட், மத்திய மின் நிலையங்கள் மூலம் 2,429 மெகாவாட், தமிழக அனல் மின் நிலையங்கள் மூலம் 2,415 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகி யிருந்தது. காலை நேரத்தில் வீடு களுக்கு மட்டும் ஆங்காங்கே அரை மணி நேர மின் வெட்டு அமலானது. தொழிற்சாலைகளுக்கு சனிக் கிழமை நள்ளிரவு வரை அமலான மின்வெட்டு, ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக தளர்த்தப்பட்டது.
கூடங்குளம் நிலையத்தில் பாதிப்பு
ஞாயிற்றுக்கிழமை பகல் நிலவரப்படி, கூடங்குளம் அணு மின் நிலையத்தில், இயந்திரக் கோளாறால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தமிழகத்துக்கு மின்சாரம் தரும் கைகா அணு மின் நிலையம் (220 மெகாவாட்), ராமகுண்டம் அனல் மின்நிலைய ஐந்தாம் அலகு (500 மெகாவாட்), எண்ணூர் நிலைய மூன்று அலகுகள் (280 மெகாவாட்), மேட்டூர் நிலைய நான்காம் அலகு (210 மெகாவாட்), வட சென்னை விரிவாக்க நிலையம் (600 மெகாவாட்) மற்றும் கொதிகலன் விபத்துக் குள்ளான என்.எல்.சி. ஏழாம் அலகு (100 மெகாவாட்) ஆகியவற்றில் மின்சாரம் உற்பத்தியாகவில்லை. இதனால் தமிழக அரசுக்கு மத்திய அரசின் பங்கில் 1,000 மெகாவாட் குறைவாகவே கிடைத்தது.