

கடலூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வீதி வீதியாக ஓட்டுக்குப் பணம் வழங்குவது தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அதிமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னி்ட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வகையில் ஒரு சில கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் கடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கோண்டூர், நத்தப்பட்டு, பச்சையாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு ரூ.250 முதல் 500 வரை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நெய்வேலி டவுன்ஷிப்பில் வாக்குக்கு ரூ.500 வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.இது தொடர்பாக கடலூர் ஆட்சியர் சுரேஷ்குமாரிடம் கேட்டபோது அதிமுக நிர்வாகி ஒருவரை போலீஸார் கைதுசெய்திருப்பதாகவும், மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளதால் அவற்றை சேகரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.