

சோமங்கலம் அருகே கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் சோதனை ஓட்டத்தின்போது ராட்டினம் உடைந்து தொழிலாளர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக, அந்த பூங்காவின் உரிமையாளர் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அருகே சோமங்கலம் பகுதியில் கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. கேரள மாநிலம் கன்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொழுதுபோக்கு பூங்காவுக்காக ராட்சத ராட்டினத்தை தயாரிக்கும் பணி இங்கு நடைபெற்றதாக தெரிகிறது. அப்போது, சோதனை ஓட்டமாக பூங்கா நிர்வாகம் இயக்கியதாகவும் அப்போது, ராட்டினத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயணித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது ஒரு சுழலின் போது ராட்டினம் உடைந்து விழுந்தது. இதில், குன்றத்தூரைச் சேர்ந்த தொழிலாளர் மணி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்த சோமங்கலம் போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில், அஜாக்கிரதையாக செயல்பட்டதாக பூங்காவின் உரிமையாளர் ஜோஸ்புனுஸ் மற்றும் மேலாளர் சக்திவேல் ஆகியோரை சோமங்கலம் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் தாமோதரன் தலைமையில் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், கிஷ்கிந்தா நிறுவனம் ராட்டினம் தயாரிப்பதற்கு தொழிற்துறையிடமோ, மாவட்ட வருவாய்த் துறையிடமோ எந்தவித அனுமதியையும் பெறவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தரத்தை சோதிக்க ஆளில்லை
கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் ராட்டினங்கள் அமைக்கப்படும்போது போலீஸ், தீயணைப்பு துறை, மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை ஆகிய துறைகளிடம் இருந்து தடையில்லா சான்று வாங்கப்படுகிறது. ஆனால் எந்த துறையுமே ராட்டினத்தின் தரத்தை சோதித்து பார்ப்பதில்லை. இதனால் தரம் குறைவான ராட்டினங்களையும், வெளிநாடுகளில் பயன்படுத்தி விட்டு விற்பனை செய்யப்படும் ராட்டினங்களையும் வாங்கிக்கொண்டு வந்து இங்கே பயன்படுத்துகின்றனர். ஆனால் இவற்றை தடுப்பதற்கான சோதனைகள் எதுவுமே இங்கு இல்லை.