Published : 03 May 2016 02:24 PM
Last Updated : 03 May 2016 02:24 PM

தேர்தல் முடியும் வரை விடுமுறை கிடையாது: ஓய்வின்றி பணிபுரிவதால் போலீஸார் தவிப்பு

தமிழகத்தில் போலீஸார் பற்றாக்குறையால் தேர்தல் முடியும் வரை எக்காரணம் கொண்டும் விடுமுறை கிடையாது என கண்டிப்பான வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஓய்வே இல்லாமல் பணிபுரிவதால் போலீஸார் கடும் அவதியடைந்துள்ளனர்.

தமிழக காவல்துறையில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 996 போலீஸார் பணிபுரிய வேண்டும். ஆனால், 99 ஆயிரத்து 896 போலீஸார் மட்டுமே உள்ளனர். இவர்களில், இரண்டாம் நிலை, முதல்நிலைக் காவலர், தலைமைக் காவலர்கள் மட்டும் 92,614 பேர் இருக்க வேண்டும். ஆனால், 77,750 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். ஒட்டு மொத்தமாக 21,100 போலீஸார் பற்றாக்குறை காணப்படுகிறது.

தற்போதைய மக்கள் தொகை, புறநகர் பகுதி விரிவாக்கத்துக்கு தகுந்தபடி புதிய பணியிடங்கள் உருவாக்கப்படாததால், அனைத்து காவல் நிலையங்களிலும் போலீஸார் பற்றாக்குறை நீடிக்கிறது. அதனால், சாதாரண நாட்களிலேயே போலீஸாருக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், குற்ற வழக்குகளில் உடனுக்குடன் குற்றவாளிகளை கண்டுபிடிக்கத் தவறினாலும், அன்றாடப் பணிகள் தாமதமானாலும் உயர் அதிகாரிகளின் நெருக்கடிக்கும் ஆளாக வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு காவல் நிலையத்திலும் விஐபி பந்தோபஸ்து, பறக்கும் படை, நிலைக் கண்காணிப்பு குழு தேர்தல் கண்காணிப்பு, சோதனை மற்றும் பாதுகாப்புப் பணி, முக்கியத் தலைவர்கள், வேட்பாளர்கள் பிரச்சாரப் பணிகளுக்கு போலீஸார் அனுப்பப்படுகின்றனர்.

இதனால், ஒன்றிரண்டு போலீஸாரே காவல்நிலையங்களில் இருக்கின்றனர். இவர்களே சட்டம், ஒழுங்கு முதல் வழக்கமான எல்லா பணிகளையும் பார்க்க வேண்டியதிருப்பதால் அன்றாட வழக்கு, புகார் மனு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது:

போலீஸார் பற்றாகுறையால் தேர்தல் அறிவித்த நாள் முதல் விடுமுறை, ஓய்வு இல்லாமல் பணிபுரிகிறோம். 50 வயதுக்கு மேற்பட்ட போலீஸாரில் பெரும்பாலானவர்கள், பல்வேறு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள். அவர்களால் தற்போது கோடை வெயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட முடியவில்லை. அதனால், உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

தேர்தல் பணியில் ஒட்டுமொத்த போலீஸாரும் ஈடுபடுத்தப்படும் இந்த சூழலிலும் அனைத்து காவல் நிலையங்களிலும் இரவு பீட் போடுகின்றனர். சில காவல் நிலையங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் இரவு பணியும், சில காவல் நிலையங்களில் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் இரவு பீட் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைவிட குறைவான ஊக்கத்தொகையே வழங்கப்படுகிறது.

ஏழு நாட்கள் வேலைபார்த்தால் ஒருநாள் விடுமுறை கொடுக்க வேண்டும். ஆனால், தற்போது தேர்தல் முடியும் வரை துக்க நிகழ்ச்சிகள் தவிர மற்ற விசேஷங்கள் எதற்கும் போலீஸாருக்கு விடுமுறை கிடையாது என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனால், குடும்ப முக்கிய சுபகாரியங்களில் கூட பங்கேற்க முடியவில்லை. கோடைகால விடுமுறையில் குழந்தைகளை உறவினர் வீடுகளுக்கும், சுற்றுலா அழைத்துச் செல்லவும் முடியாமல் போலீஸார் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை விட குறைவான ஊக்கத்தொகைதான் போலீஸாருக்கு வழங்கப்படுகிறது. அதனால், இந்த முறை அவர்களுக்கு இணையாக தேர்தல் பணி ஊக்கத்தொகை பெற்றுத் தர தமிழ்நாடு காவல்துறையும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x