Published : 02 May 2016 09:26 AM
Last Updated : 02 May 2016 09:26 AM

ராயபுரம் தொகுதியை கைப்பற்ற வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்: மீனவர் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக வாக்குறுதி

கழிவுநீர் மற்றும் மீனவர் பிரச்சினை களை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ராயபுரம் தொகுதியில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

150 ஆண்டு கால பழமை வாய்ந்த ரயில் நிலையம், ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை ஆகியவற்றைக் கொண்ட ராயபுரம் தொகுதி சென்னையின் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக விளங்கு கிறது. இத்தொகுதியில் 91 ஆயிரத்து 952 ஆண் வாக்காளர் கள், 94 ஆயிரத்து 394 பெண் வாக் காளர்கள், 40 இதர வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 386 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக மீனவர்களும், தலித்துகளும் உள்ளனர்.

இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ள டி.ஜெயக்குமார் 4-வது முறையாக வெற்றிபெறும் முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சியும், எம்ஜிஆர் பாடல்களை பாடியும், அதிமுக அரசின் சாதனைகளை விளக்கியும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோ, காசிமேடு மீனவர் குடியிருப்பு பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலம் மற்றும் மழைக் காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தித் தர நடவடிக்கை எடுப்பதாகவும், மீன்பிடி படகுகளுக்கான டீசல் மானியத்தை உயர்த்துவதாகவும் அவர் வாக்குறுதி கொடுத்தார். தனது பிரச்சாரம் குறித்து ‘தி இந்து’விடம் கூறிய அவர், “ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக்குவது உள்ளிட்ட தொகுதி சார்ந்த 30 அம்ச வாக்குறுதிகளை வழங்கி மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறேன்” என்றார்.

பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த தமாகா வேட்பாளர் பிஜூ சாக்கோ, ‘தி இந்து’விடம் கூறும்போது, “ராயபுரத்தில் முக்கிய பிரச்சினையாக கழிவுநீர் அடைப்பு இருந்து வருகிறது. சென்னையின் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பலகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் ராயபுரத்தின் தற்போதைய எம்எல்ஏவான ஜெயக்குமார், இந்த தொகுதிக்கு அந்த நிதியை கேட்டுபெறவில்லை. இதனால் ராயபுரம் பகுதியில் கழிவுநீர் பிரச்சினை தீராத பிரச்சினையாக உள்ளது. நான் வெற்றிபெற்றால் அப்பிரச்சினையை தீர்ப்பேன்” என்றார்.

பாஜக வேட்பாளர் ஜமீலா, ராயபுரம் பாண்டியன் தியேட்டர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். “இத்தொகுதியில் கழிவுநீர், குடிநீர் பிரச்சினைகள் நீண்ட நாட்களாக இருக்கின்றன. சாலைகளும் சரியாக இல்லை. மீன்பிடி துறைமுகம் அசுத்தமாக உள்ளது. நான் வெற்றிபெற்றால் இப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன்” என்று ‘தி இந்து’ விடம் அவர் கூறினார்.

பாமக வேட்பாளர் டி.எஸ்.பெருமாள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பா.ஆனந்தராஜ் ஆகியோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராயபுரம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x