100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு: மக்கள் நலப் பணியாளர்கள் போராட முடிவு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
2 min read

மதுரை: மக்கள் நலப் பணியாளர்களை நூறு நாள் வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக பணியில் சேர அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமிக்கும் வரை பணியில் சேராமல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மக்கள் நலப்பணியாளர் சங்க மாநில தலைவர் என்.செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் பெ.அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், மக்கள் நலப்பணியாளர்கள் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை உறுதித்திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்கள் 12,523 பேர் பணியமர்த்தப்படுவர் என தெரிவித்துள்ளார்.

இப்பணியில் 8.11.2011-ல் பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள், சேர விரும்பினால் விணப்பங்களை அளிக்கலாம். முந்தைய பணிக்கான பணிக்கால உரிமை, உரிமைத்தொகை ஏதும் கேட்கமாட்டேன் என கடிதம் அளிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மாத ஊதியம் ரூ.5 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கான சேர்க்கை குறித்து வரும் ஜூன் 10-ம் தேதி மாவட்ட அளவில் அறிவிப்பு வெளியிட வேண்டும். விண்ணப்பங்களை ஜூன் 13 முதல் 18 வரையில் பெற வேண்டும். ஜூன் 20-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சரிபார்த்து, ஜூலை 1-ம் தேதி பணியில் சேர்வதற்கான உத்தரவுகளை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மக்கள் நலப்பணியாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மக்கள் நலப்பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் என்.செல்லப்பாண்டியன் கூறுகையில், ''ஊரக வளர்ச்சித் துறையில் அதிகம் பேர் இருப்பதாகக் கூறித்தான் எங்களை பணிநீக்கம் செய்தனர். மீண்டும் அதே துறையில் எப்படி வேலை வழங்குகின்றனர் என தெரியவில்லை. இதுபோன்ற உத்தரவை 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வெளியிட்டனர். அதை ஏற்க மறுத்ததால் அந்த உத்தரவு ரத்தானது. தற்போது திமுக அரசிலும் எங்களுக்கு பாதிப்பை அளிக்கும் உத்தரவைத்தான் வெளியிட்டுள்ளனர்.

ஊரக வளர்ச்சித் துறையில் ரூ.5000, கிராம பஞ்சாயத்து தலைவரிடம் ரூ.2,500 ஊதியம் மாதந்தோறும் பெற வேண்டும் என தெரிவிக்கின்றனர். 12 ஆண்டுகள் பணியாற்றினோம். 20 ஆண்டுகள் பணி நீக்கத்தில் இருக்கிறோம். 32 ஆண்டுகள் பணிமூப்பு உள்ள நிலையில் எந்தவித பணி பாதுகாப்பும் இல்லாமல் நியமிக்க திட்டமிட்டுள்ளனர்.

முதல்வருக்கு தவறான வழிகாட்டுதலை அளித்துள்ளனர். இந்த உத்தரவை உடனே ரத்து செய்யக்கோரியும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் நிரந்தர அரசு பணியாளராக நியமிக்கக் கோரியும் மாநில அளவில் மாவட்டந்தோறும் இன்று ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு வேண்டுகோள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

நடக்காத நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி வரும் ஜூன் 13-ம்தேதி முதல் சென்னையில் காத்திருப்பு இயக்கம் நடத்துவோம். இந்த விசயத்தில் பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 19-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில் என்ன முடிவு கிடைக்கிறது என்பதை பொறுத்தே எங்களின் முடிவு இருக்கும். அதுவரையில் யாரும் புதிய பணியில் சேர வேண்டாம் என தெரிவித்துள்ளோம்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in