காவல் துறை புகார் ஆணையம்: தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

காவல் துறை புகார் ஆணையம்: தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக காவல் துறை புகார் ஆணையம் அமைக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.

காவல் துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல் துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் 'காவல் துறை புகார் ஆணையம்' அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் 'காவல் துறை சீர்த்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவல் துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைக்கக் கோரி சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுதந்திரமான நபர்களை ஏன் நியமிக்கவில்லை என கேள்வி எழுப்பினர். உள்துறை செயலாளர், டிஜிபி அடங்கிய மாநில குழு மற்றும் ஆட்சியர், காவல்துறை எஸ்பி அடங்கிய மாவட்ட குழுக்களை அமைத்த சட்டத்தை திருத்த போதிய அவகாசம் வழங்கியும் திருத்தவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

உயர் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அவர்களே எப்படி விசாரிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியதுடன், புகார் ஆணையம் அமைத்த சட்டத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி திருத்தம் செய்யாவிட்டால் அதை ரத்து செய்யப்போவதாகவும் தெரிவித்தனர். சட்டத்தில் திருத்த செய்வது தொடர்பாக அரசு தெரிவிப்பதற்கு இறுதி அவகாசம் வழங்கி வழக்கை ஒருநாள் (ஜூன் 10-க்கு) தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in