Last Updated : 09 Jun, 2022 10:22 PM

 

Published : 09 Jun 2022 10:22 PM
Last Updated : 09 Jun 2022 10:22 PM

நாட்றாம்பள்ளி அருகே கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருப்பத்தூர்: நாட்றாம்பள்ளி அருகே கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர். க.மோகன்காந்தி தலைமையில், காணிநிலம் மு.முனிசாமி மற்றும் ஆய்வுக் குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள ஆய்வு நடத்தி பல்வேறு வரலாற்று தடயங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நாட்றாம்பள்ளி அருகே நடத்திய கள ஆய்வில் கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றை ஆய்வுக்குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து பேராசிரியர் முனைவர்.க.மோகன்காந்தி கூறியதாவது, ''திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி வட்டம், பங்களாமேடுப் பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் கமலநாதன் அளித்த தகவலின் பேரில், எங்கள் ஆய்வுக்குழுவினர் அங்கு சென்று கள ஆய்வு நடத்தினோம். அப்போது, அங்கு 4.5 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வெள்ளை நிறப்பலகைக் கல்லில் கல்வெட்டு ஒன்று வாசகத்துடன் இருப்பதை கண்டோம்.

கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டில், 7 வரிகளில் எழுதப்பட்டுள்ளன. ஆற்றின் வழியாக ஏரிக்கு செல்லும் கால்வாய்யை சீர்ப்படுத்திய செய்தியை இக்கல்வெட்டு நமக்கு எடுத்துரைக்கிறது. அத்தியூர் என இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைக்கு இதே பெயரில் புதுப்பேட்டைக்கு அருகாமையில் சிற்றூர் ஒன்று உள்ளது. இந்த ஆற்றுக் கால்வாய்க்கு சித்திரமேழி என பொருள். சித்திரமேழி என்றால் அலங்கரடிக்கப்பட்ட ஏர்க்கலப்பை என பொருள்.

சித்திரமேழி பெரியநாட்டார் சபை என்ற குழுவினர் அரியலூர் பகுதியை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் வேளாண்மை பொருட்களை வாங்கி தமிழகம் முழுவதும் வணிகம் செய்துள்ளனர்.

விவசாயத்தைப் பெருக்கும் விதமாக பங்களாமேட்டிற்கு அருகே ஓடும் அக்ரகாரத்து ஆற்றுக் கால்வாய் சீரமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் கரப்ப ஏரிக்கு சென்றதாக இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்திரமேழி என்ற கல்வெட்டு வாசகத்துக்கு வலுசேர்க்கும் விதமான அழகிய வடிவில் ஏர்க்கலப்பை ஒன்று சித்திரிக்கப்பட்டுள்ளது.

அதன் அருகிலேயே, குத்துவிளக்கு ஒன்றும் சித்திரிக்கப்பட்டுள்ளது. நாட்றாம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் நீரோடைகளை சிறு ஆற்றுக் கால்வாயாக மாற்றி அந்த வழித்தடத்தை செம்மைப்படுத்தி, கால்வாய் வழியாக ஓடி வரும் தண்ணீரை ஏரியில் சேமித்து, அந்த தண்ணீரை வேளாண்மைக்கு பயன்படுத்தியுள்ளனர்.

சோழர் காலத்தை சேர்ந்த இக்கல்வெட்டின் மூலம் பண்டைத்தமிழ் மக்கள் நீர் மேலாண்மைப்பற்றி தெரிந்துகொள்ள சிறந்த சான்றாக இக்கல்வெட்டு அமைந்துள்ளது. கால்வாய் வெட்டித் தருதல் ஒரு அறப்பணியாக பார்க்கப்பட்டுள்ளது என்பது இக்கல்வெட்டு மூலம் நமக்கு உணர்த்தப்படுகிறது.

மேலும், அதேபகுதியில் கி.பி.19 நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டும் கண்டெடுத்தோம். அக்கல்வெட்டானது 'பூன குடுத்தான்' என்ற வாசகம் தொடங்குகிறது. பங்களாமேட்டின் வடக்குப்பக்கம் பார்த்தீபன் என்பவரின் நிலத்தின் அருகே இக்கல்வெட்டு நட்டு வைக்கப்பட்டுள்ளது. சரியான மழை இல்லாத போது புதுப்பேட்டைச் சுற்றியுள்ள கிராமமக்கள் இக்கல்வெட்டிற்கு ஆடு வெட்டி பலி கொடுத்து பொங்கல் படைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்தபகுதி மக்கள் இந்த கல்லை வணங்கினால் மழைப்பொழியும் என நம்பிக்கை கொண்டு இந்த செயலை செய்து வருவது தெரிகிறது.

ஆகவே, இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகளை மாவட்ட தொல்லியல் துறையினர் ஆவணம் செய்து, அதை பாதுகாக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x