கோவை | மேட்டு லட்சுமிநாயக்கன் பாளையம் அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.1,000 - தலைமையாசிரியர் ‘பரிசு‘ அறிவிப்பு

தனது பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர் ப.லட்சுமணசாமி
தனது பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர் ப.லட்சுமணசாமி
Updated on
1 min read

கோவை: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள தொடக்கப் பள்ளியில் நடப்பாண்டில் சேரும் மாணவர்களுக்கு சொந்த நிதியில் இருந்து தலா ரூ.1,000 பரிசாக வழங்கப்படும் என அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவித்துள்ளார்.

கோவை சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டு லட்சுமிநாயக்கன் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. கடந்த 1950-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 15 மாணவ, மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ப.லட்சுமணசாமி, ஆசிரியர் டி.வைரவபாண்டி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளி அமைந்துள்ள கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 500-க்குள்தான் உள்ளது. கிராம மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகளாகவும், விவசாயத் தொழிலாளர்களாகவும் உள்ளனர்.

அருகில் உள்ள கிராமங்களிலும் அரசுப் பள்ளிகள் இருப்பதால், மேட்டுலட்சுமிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த குழந்தைகள் மட்டுமே இந்தப் பள்ளியில் சேர்கின்றனர். இங்கு தொடக்கக் கல்வியை முடிக்கும் மாணவர்கள் உயர்நிலை கல்விக்காக அக்கநாயக்கன்பாளையத்துக்கும், மேல்நிலை கல்விக்காக லட்சுமிநாயக்கன்பாளையம் மேல்நிலைப் பள்ளிக்கும் செல்கின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பரிசுத் தொகை திட்டத்தை அறிவித்திருக்கிறார் தலைமை ஆசிரியர் லட்சுமணசாமி. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1,000 பரிசளிப்பதாக துண்டுப் பிரசுரம் அச்சடித்து கிராமத்தில் விநியோகித்து வருகிறார் லட்சுமணசாமி.

இது குறித்து அவர் கூறும்போது, "கடந்த ஆண்டும் இதுபோன்ற பரிசுத் திட்டத்தை அறிவித்தேன். அதன்படி 3 மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயை எனது ஊதியத்தில் இருந்து வழங்கினேன். இந்த ஆண்டு எத்தனை மாணவர்கள் சேர்ந்தாலும் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளேன்.

மரங்கள் நிறைந்த அமைதியான சூழல், பரந்த விளையாட்டு மைதானம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இருக்கக் கூடிய பள்ளியாக எங்கள் பள்ளி உள்ளது. இதைக் கூறி மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறேன். தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதாக பெற்றோர் சிலர் விசாரித்துச் சென்றுள்ளனர். வரும் 13-ம் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளது. அன்று முதல் மாணவர்கள் நேரடியாக சேர்க்கப்படுவார்கள்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in