Last Updated : 09 Jun, 2022 03:47 PM

 

Published : 09 Jun 2022 03:47 PM
Last Updated : 09 Jun 2022 03:47 PM

கீழணை வற்றியதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்

தண்ணீர் இல்லாமல் வற்றிய நிலையில் காட்சியளிக்கும் கீழணை

கடலூர்: கீழணை வற்றியதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் வீராணம் ஏரி. இதன் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்டத்தின் காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதிகளில் 48 ஆயிரத்து 850 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிளார்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் நல்ல நிலையில் உயர்ந்துள்ளது. ஏரியில் இருந்து சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வீராணம் ஏரிக்கு மேட்டூர் தண்ணீரை தேக்கி வைத்து அனுப்பி வைக்கப்படும் கீழணையில் தண்ணீர் வரத்து இல்லாமல் இன்று (ஜூன்.9) வற்றியது. கீழணையில் 9 அடி தண்ணீரை மட்டுமே தேங்கி வைக்கப்படும்.

கீழணையில் தண்ணீர் இல்லாததால் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடும் வெயில் மற்றும் தொடர்ந்து சென்னைக்கு குடி நீர் அனுப்பி வைக்கப்பட்டு வருவதால் ஏரியின் நீர் மட்டம் சரசரவென குறைந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 40.15 அடி உள்ளது.

சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும். இது படிப்படியாக குறைக்கப்பட்டு சென்னைக்கு இன்று (ஜூன்.9) விநாடிக்கு 49 கன அடி தண்ணீர் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கும் அனுப்பும் நீரின் அளவும் வெகுவாக குறைக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஏரியில் நீர் மட்டம் குறைந்தவுடன் சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைப்பதும் நிறுத்தப்படும்.

இந்த நிலையில், நீர்வளத்துறை அதிகாரிகள் மேட்டூரில் இருந்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் மாற்று ஏற்பாடாக வாலாஜா ஏரி தண்ணீரை பரவனாற்றில் இருந்து விநாடிக்கு சுமார் 15 கன அடி தண்ணீரை எடுத்து வீராணம் குழாய் வழியாகவே சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

மேலும் தண்ணீர் தேவை அதிகரிக்கும் நிலையில் வடலூர் முதல் பண்ருட்டி வரை உள்ள மெட்ரோ வாட்டர் போர்வெல்களில் தண்ணீர் எடுக்க மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x