“திமுகவுக்கு மாற்று அதிமுகதான்” - பாஜக அரசியல் குறித்து நத்தம் விஸ்வநாதன் கருத்து

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் | கோப்புப் படம்
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுக்கோட்டை: “சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம். பாஜகவினர் அழைத்தால் சசிகலா அங்கு செல்லலாம்” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். மேலும், திமுகவுக்கு மாற்று அதிமுகதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று (ஜூன் 9) நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் நத்தம் விஸ்வநாதன் கூறியது: "சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவரைப் பற்றி பேசவேண்டிய அவசியமும் இல்லை.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு நபர் குறித்து ஏன் பேச வேண்டும்? அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமே இல்லை. தற்போது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவர் சரியான முறையில் கட்சியை வழி நடத்தி வருகின்றனர்.

பாஜகவினர் அழைத்தால் அங்கு வேண்டுமானால் சசிகலா செல்லட்டும். இங்கு அவருக்கு இடமில்லை. அதிமுகவைப் பொறுத்தவரையில் எதுவாகினும் பொதுக்குழு எடுக்கும் தீர்மானம் மட்டுமே அதிகாரபூர்வமானது.

திமுகவும், மின்தடை பிரச்சினையும் பின்னிப் பிணைந்தவை. அது பிரிக்க முடியாதது. திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்தடை பிரச்சினை வந்துவிடும் என்பது எல்லோரும் அறிந்ததே. மின்தடை பிரச்சினைக்கு தற்போதைய அமைச்சரின் நிர்வாக திறமையின்மையே காரணம். அவருக்கு இத்துறையை பற்றி அனுபவம் போதாது. இது குறித்து நான் ஏற்கெனவே சட்டப்பேரவையில் பேசியிருக்கிறேன். மின்சார துறையை தமிழக முதல்வரே கையில் எடுத்து கவனித்தால் மட்டுமே மின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று அதிமுகதான். அதிமுக மட்டுமே தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்க முடியும். பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தோர் அரசியல் காரணங்களுக்காக சில விஷயங்களை கூறுவார்கள். அதை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. காலம் வரும்போது மக்கள் உரியவர்களை தேர்ந்தெடுப்பார்கள்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in