5 தேர்களின் தேரோட்டம்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்

5 தேர்களின் தேரோட்டம்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்
Updated on
1 min read

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 5 தேர்களின் தேரோட்டத்தை சட்டமன்ற உறுப்பினர், துணை ஆட்சியர் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர்.

திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு விழா கடந்த மே மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் உற்சவம், சுப்பிரமணியர் உற்சவம், அடியார்கள் உற்சவம் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா கடந்த 2ம் தேதி இரவு நடைபெற்றது. 4ம் தேதி செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திலிருந்து இந்திர விமானத்தில் உன்மத்த நடனத்துடன் யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது.

7ம் தேதி இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பாள் சமேத தர்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி சகோபுர வீதியுலா நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய நிகழ்வான 5 தேர்கள் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு செண்பக தியாராஜ சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து நீலோத்பாலாம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளும் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.

பின்னர் தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனைக் காட்டப்பட்டு, காலை 5.30 மணியளவில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிஆர் சிவா, மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஷ், மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன், தருமபுரம் ஆதீனப் பிரதிநிதி கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) அருணகிரிநாதன் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.

நான்கு வீதிகளையும் சுற்றி வந்த பின்னர் மாலை தேர்கள் மீண்டும் நிலையை வந்தடையும். விழாவில், நாகை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in