Published : 09 Jun 2022 04:57 AM
Last Updated : 09 Jun 2022 04:57 AM

அங்கன்வாடி மையங்களுக்கு மழலையர் வகுப்பு மாற்றப்பட்டது ஏன்? - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

சென்னை: ஆசிரியர் பற்றாக்குறை, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் அமலாக்கம் உள்ளிட்ட காரணங்களால் மழலையர் வகுப்புகள் அங்கன்வாடி மையங்கள் வசம் ஒப்படைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் 2019-ம் ஆண்டு சோதனை முறையில் தொடங்கப்பட்டன. இந்த மழலையர் வகுப்புகளைக் கையாள தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு மழலையர் வகுப்பு குழந்தைகளைக் கையாள்வதில் சிக்கல்களும், புரிதல் இன்மையும் நீடித்தது. மறுபுறம் தொடக்கக்கல்வி இயக்குநரகத்தில் 2013-14-ம் கல்வியாண்டு முதல் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவில்லை.

இதனால் கடந்த கல்வியாண்டின் இறுதியில் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களில் 4,863 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டன. மேலும், 3,800 தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 வரையான வகுப்புகளை ஒரேயொரு ஆசிரியர் என்ற முறையில்தான் கவனித்து வந்தனர்.

ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி போதிக்க இயலாத சூழல் ஏற்பட்டு அதன் விளைவாக மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாகக் குறைந்தது. இதற்கிடையே கரோனா பரவலுக்குப் பின்னர், அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்துக்கு மேல் புதிதாக மாணவர்கள் சேர்ந்தனர். அதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மட்டும் 2.80 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளின் மேல் நம்பிக்கை வைத்து கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.

இதன் காரணமாக மாணவர் -ஆசிரியர் விகிதாச்சாரப்படி 4,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கூடுதலாகத் தேவைப்படுகின்றனர். ஏற்கெனவே உள்ள காலிப்பணியிடங்களுடன் சேர்த்தால் மொத்தம் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டு கல்வியின் தரம் குறையும் சூழல் ஏற்படக்கூடும்.

இதுகுறித்து உயர்மட்ட அலுவலர்கள் கூட்டத்தில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளின்படி மழலையர் வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப்பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர்.

இதுதவிர கரோனாவால் அரசுப் பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரிசெய்ய ‘எண்ணும் எழுத்தும்' எனும் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தவும், சரியான பாதையில் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கவும் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்துக்கு போதுமான எண்ணிக்கையில் இன்னும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு அங்கன்வாடி மையங்களில் ஏற்கெனவே இருந்த குழந்தைகளுக்கு, முந்தைய நடைமுறையைப் பின்பற்றி இந்தாண்டு முதல் அங்கன்வாடி உதவியாளர் மூலம் தற்காலிகமாக கற்றல் செயல்பாட்டை மேற்கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்கு வெற்றிகரமாகச் செயல்படுத்தும்போது தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கற்றல் நிலைகளில் மேம்படுவார்கள். இத்தகையநடவடிக்கைகளால், 3 ஆண்டுக்குப்பின்பு தேசிய அளவிலான கற்றல் அடைவு சோதனை முடிவுகளில் (நாஸ்) 27-வது இடத்தில் இருக்கும் தமிழகம், முதல் 10 இடத்துக்குள் வந்துவிடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x