Published : 11 May 2016 12:59 PM
Last Updated : 11 May 2016 12:59 PM

தவ வாழ்வுக்கு ஓர் ஏக்கர் போதாதா?- ஜெ.-க்கு ஜி.ஆர் கேள்வி

தவ வாழ்வு வாழ்வதாகக் கூறும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு ஏக்கர் நிலம் போதாதா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

தஞ்சாவூர் ரயிலடியில் தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் வி.ஜெயபிரகாஷை ஆதரித்து அவர் நேற்று முன்தினம் பேசியது: விவசாயிகள் சலுகை கேட்கவில்லை. விளை பொருட்களுக்கு உரிய விலை கேட்கின்றனர். ஆனால், அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கும், கரும்புக்கும் உரிய விலை தருவோம் என அறிவிப்பதற்குப் பதிலாக, இலவச செல்போன் தருவதாக அறிவிக்கிறது.

டிராக்டர் கடன் நிலுவைக்காக விவசாயி பாலனை போலீஸ் அடித்து, உதைத்து அவமானப்படுத்தியது. அதே போலீஸ், ரூ.9 ஆயிரம் கோடி கடனைத் திரும்ப செலுத்தாத விஜய் மல்லையாவையோ, ரூ.1.5 லட்சம் கோடி கடனை திரும்பச் செலுத்தாத பெரு முதலாளிகளையோ தொட முடியுமா?

இந்தப் போலீஸுக்குத்தான் சுதந்திரம் அளிக்கப்படும் என்கிறார் மு.க. ஸ்டாலின்.

ஜெயலலிதாவுக்கும், ஸ்டாலினுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அரசியலுக்கு வருவது மக்களுக்கு தொண்டு செய்வதற்குதான் என்கின்றனர்.

ஆனால், அதிமுக, திமுக தலைமைகள் கொள்ளையடிக்கவும், சொத்து சேர்க்கவும், ஊழல் செய்யவும்தான் அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

ஜெயலலிதா எனக்கென்று குடும்பம் இல்லை. எனக்கு சுயநலம் ஏதும் இல்லை என்கிறார். அப்படி என்றால், கொடநாட்டில் ஆயிரம் ஏக்கரில் எஸ்டேட் எதற்கு. தவ வாழ்வு வாழ ஒரு ஏக்கர் நிலம் போதாதா?

அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் அதிமுக, திமுக ஊழல் செய்வதில் ஒன்றாகவே உள்ளன. இவர்களின் கடந்த 20 ஆண்டுகால ஆட்சியில் ரூ.1.6 லட்சம் கோடி கிரானைட் மோசடி நடந்துள்ளது. மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்து சம்பாதித்த சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x