Published : 09 Jun 2022 09:01 AM
Last Updated : 09 Jun 2022 09:01 AM
புதுடெல்லி: 2011-ல் அதிமுக ஆட்சியில் மக்கள்நலப் பணியாளர்கள் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், விருப்பமுள்ள மக்கள் நலப் பணியாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், கவுரவ ஊதியமாக மாதம் ரூ.7,500 வீதம் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவர் என்று முதல்வர் ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத் தலைவர் தன்ராஜ், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதில், பணியில் நியமிக்கப்படும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு ரூ.7,500 கவுரவ ஊதியம் வழங்குவது, 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடியவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. எனவே, மக்கள் நலப் பணியாளர்களுக்கு, 7-வது ஊதியக்குழு பரிந்துரைபடி நியாயமான சம்பளம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை, தமிழக அரசின் புதிய கொள்கை முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற விடுமுறைகால சிறப்புஅமர்வில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா,அனிருத்தா போஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. தமிழக அரசுத் தரப்பில் வழக்கறிஞர் குமணனும், மதிவாணன் என்பவரைத் தலைவராகவும், ராஜேந்திரன்என்பவரை பொதுச் செயலராகவும் கொண்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும் ஆஜராகினர்.
கட்டாயப்படுத்தவில்லை...
இவர்கள் தங்களது வாதத்தில், ‘‘தமிழக அரசு ஏற்கெனவே கரோனாவால் நிதிநெருக்கடியை சந்தித்தது. எனினும், மக்கள் நலப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டே, ரூ.7,500 கவுரவ ஊதியத்தில் மீண்டும் பணிவழங்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் பணியில் சேரலாம். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
ஒரு பிரிவினர் மட்டும் புதிதாக ஒரு சங்கத்தை ஏற்படுத்திக் கொண்டு,பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த விவகாரம் வேண்டுமென்றே அரசியலாக்கப்படுகிறது’’ என்று வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘விருப்பமுள்ள மக்கள் நலப் பணியாளர்கள் மட்டும் மீண்டும் பணியில்சேரலாம் என்றுதான் தமிழக அரசுகூறுகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் பணியில் சேரட்டும். மற்றவர்கள் சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்ளட்டும். அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது’’ என்றுகூறி, தடை விதிக்க மறுப்புத் தெரிவித்தனர்.
மேலும், ‘‘தமிழக அரசு விருப்பம் இல்லாத மக்கள் நலப்பணியாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. தங்களது கோரிக்கைகளை முன்வைக்க அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படும்’’ என்று உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT