Published : 09 Jun 2022 07:35 AM
Last Updated : 09 Jun 2022 07:35 AM
கரூர்: சிறுமி பேருந்தில் ஏறிய நிலையில் தாய் ஏறுவதற்குள் பேருந்தை இயக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கரூரிலிருந்து ஆலமரத்துப்பட்டிக்கு அரசு நகரப் பேருந்து நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. கோடங்கிப்பட்டி என்ற இடத்தில் பேருந்து நின்றபோது, ரேஷன் பொருட்கள் மற்றும் தனது 10 வயது மகளுடன் பெண் பேருந்தில் ஏற முயன்றார். ஆனால், சிறுமி மட்டும் பேருந்தில் ஏறிய நிலையில், தாய் ஏறுவதற்குள் பேருந்தை ஓட்டுநர் இயக்கிச் சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சப்தம் போட்டுக் கொண்டே பேருந்துக்குப் பின்னால் ஓடினார். இதை கவனித்த அங்கிருந்த சிலர், தங்களது இருசக்கர வாகனத்தில் அந்தப் பேருந்தைத் துரத்திச் சென்று மறித்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பெண்களுக்கு அரசுநகரப் பேருந்தில் இலவசம் என்பதால், ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பெண்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், பெண்கள் மட்டும்நின்றால் பேருந்தை நிறுத்தாமல் சென்றுவிடுவதாகவும் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தநிலையில், அரசுப் போக்குவரத்துக் கழக கரூர் மண்டல பொதுமேலாளர் குணசேகர் பரிந்துரையின்பேரில், அந்த அரசு நகரப் பேருந்தின் ஓட்டுநர் பன்னீர்செல்வம், நடத்துநர் மகேந்திரன் ஆகியோரை நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்து கும்பகோணம்கோட்ட மேலாண்மை இயக்குநர் ராஜ்மோகன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அவர்கள் இருவரும் போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டலத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT