

சென்னை/அரியலூர்: ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் மின் உற்பத்தி திட்டத்துக்காக 11 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணை: அரியலூர் மாவட்டத்தில், டிட்கோ நிறுவனத்துக்காக பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் மின் உற்பத்தி திட்டத்துக்காக, உடையார்பாளையம் வட்டத்துக் குட்பட்ட12 கிராமங்களில் 4,017 எக்டேர் நிலத்தை எடுக்க கடந்த 1997ல் அரசு உத்தரவிட்டிருந்தது.
இதில், 3,390 எக்டேர் அதாவது 8,373 ஏக்கர் நிலம், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வீதம், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களுக்கு உட்பட்ட 13 கிராமங்களில் 3,500 பட்டாதாரர்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த நிகழ்வில், தங்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு 10 ஆயிரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதை விசாரிக்க 2 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தி 70 சதவீத வழக்குகள் தீர்க்கப்பட்டன. இழப்பீட்டை 43 மடங்கு உயர்த்தி ஏக்கருக்கு ரூ.15 லட்சம் என நிர்ணயித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், 2017-ல் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் டிட்கோ செயல் இயக்குநர், அரசுக்கு எழுதிய கடிதத்தில், நிலத்துக்கான இழப்பீடு அதிகரிப்பதால், திட்டத்தை அங்கு செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்தார். இந்தசூழலில், அரசுக்கு நில நிர்வாக ஆணையர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், கீழக்குடியிருப்பு, தண்டலை, எடையார், கட்டத்தூர், கூவாத்தூர், உடையார்பாளையம், எலையூர், சூரியமணல், தேவன்னூர், வரியன்காவல் ஆகிய 11 கிராமங்களில் எடுக்கப்பட்ட நிலங்களை அதன் பழைய உரிமையாளர்களிடம் திருப்பியளிக்கலாம் என்றும், ஏற்கெனவே வழங்கப்பட்ட இழப்பீட்டை திரும்ப பெற தேவையில்லை என்றும் பரிந்துரைத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, நிலத்தை திரும்பி வழங்க உத்தரவிட்டுள்ளது. அரசிடம் இருந்து எந்தவொரு இழப்பீட்டையும் கோரமாட்டோம் என்று நில உரிமையாளர்களிடம் கடிதம் பெற்ற பிறகு நிலத்தை அவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பை அறிந்த 11 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பட்டாசு வெடித்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இதில், மேலூர், இலையூர் மேற்கு ஆகிய கிராமங்களில் நிலம் கொடுத்த மக்கள், கூடுதல் இழப்பீடு தொகை கொடுத்தால் மட்டுமே, நிலங்களைத் திரும்பப் பெறுவோம் என்று கூறியுள்ளதால், அவர்களுக்கு நிலங்களை திரும்ப ஒப்படைப்பது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் இந்த முடிவை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். தனது ட்விட்டர் பதிவில்,"பாமக நடத்திய போராட்டங்களின் பயனாகவே விவசாயிகளுக்கு, நிலம் மீண்டும் கிடைத்துள்ளது. மீதமுள்ள 2 கிராமங்களிலும் நிலத்தை அரசு உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.