Published : 07 May 2016 08:13 AM
Last Updated : 07 May 2016 08:13 AM

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை: பல்லாவரம் தொகுதி வேட்பாளர்கள் போட்டிபோட்டு வாக்குறுதிகள்

குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்துவது, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு, சாலை மேம்பாடு ஆகிய வற்றை முன்னிறுத்தி பல்லாவரம் தொகுதியில் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

2011-ல் தொகுதி மறுசீரமைப்பின் போது ஆலந்தூர் தொகுதியில் இருந்து சில பகுதிகளை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டது பல்லாவரம் தொகுதி. இத்தொகுதி யில் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், வியாபாரிகள் அதிகம் உள்ளனர். சமூகரீதியாகப் பார்த்தால் நாயுடு சமூகத்தினர், தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னியர்கள் அதிக அளவிலும் அதற்கு அடுத்தபடியாக நாடார் சமூகத்தினரும் உள்ளனர்.

தற்போதைய தேர்தலில் திமுக சார்பில் இ.கருணாநிதி, அதிமுக சார்பில் நடிகை சி.ஆர்.சரஸ்வதி, பாமக சார்பில் ஆர்.வெங்கடேசன், பாஜக சார்பில் டாக்டர் கோபி அய்யாசாமி, மதிமுக சார்பில் கி.வீரலட்சுமி போட்டியிடுகின்றனர்.

ஜான் ராஜரத்தினம் (பகுஜன் சமாஜ்), பி.சீனிவாச குமார் (நாம் தமிழர்), பி.கருப்புசாமி (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), எஸ்.சிட்டிபாபு (தொழிலாளர் கட்சி), எம்.பாக்யராஜ் (சிவசேனா) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வெயில் சுட்டெரிப்பதால், வேட்பாளர்கள் காலை 6.30 மணிக்கே பிரச்சாரத்தை தொடங்கி காலை 11 மணிக்குள் முடித்துவிடுகின்றனர். மீண்டும் மாலை 4 மணி தொடங்கி, இரவு 10 மணி வரை பிரச்சாரம் நீள்கிறது.

சாலைகள் சீரமைப்பு (திமுக)

திமுக வேட்பாளர் இ.கருணாநிதி நேற்று மாலை அஸ்தினாபுரம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவர் கூறும்போது, ‘‘திமுக ஆட்சியில் திட்டமிட்ட ரூ.75 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்தை குறித்த காலத்தில் செயல்படுத்தியிருந்தால் குடிநீர் பிரச்சினை இங்கு எப்போதோ தீர்ந்திருக்கும். திமுக ஆட்சிக்கு வந்தால் 2017-க்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும். பொழிச்சலூர் பகுதியில் சாலைகள் புதுப்பிக்கப்படும். திருநீர்மலை, பொழிச்சலூர் சாலைகள் அகலப்படுத்தப்படும். பொழிச்சலூர் - பம்மல் சாலை அகலப்படுத்தப்பட்டு மேம்பாலம் கட்டப்படும். குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை திட்டம் உடனே முடிக்கப்படும். குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்த முயற்சி செய்வேன்’’ என்றார்.

குடிநீர் வசதி (அதிமுக)

அதிமுக வேட்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நேற்று காலை 6.30 மணி முதல் பொழிச்சலூர், பம்மல் பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்தார். அவர் கூறும்போது, “குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளேன். ரூ.161 கோடி மதிப்பிலான செம்பரம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் 90% முடிவடைந்துவிட்டன. மீண்டும் அதிமுக ஆட்சி வந்தால் எஞ்சிய பணிகள் முடிக்கப்பட்டு குடிநீர் தங்குதடையின்றி கிடைக்கும். திரிசூலம் கல்குவாரி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என்றார்.

ஏரி தூர்வாரப்படும் (பாமக)

பாமக வேட்பாளர் ஆர்.வெங்கடேசன் திரிசூலம், மீனம் பாக்கம் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அவர் கூறும்போது, ‘‘பம்மல், அனகாபுத்தூர், பொழிச் சலூர் பகுதிகளில் தண்ணீர் பிரச் சினை நிலவுகிறது. அரசு பள்ளி களில் கழிப்பறை வசதி இல்லை. குப்பைகள் குவிக்கப்பட்டுள்ள ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத் தினால்தான், குடிநீர் பிரச்சினை யை தீர்க்க முடியும். குரோம் பேட்டை அரசு மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவ மனையாக தரம் உயர்த்த நட வடிக்கை எடுப்பேன்’’ என்றார்.

ஸ்மார்ட் சிட்டி (பாஜக)

பாஜக வேட்பாளர் டாக்டர் கோபி அய்யாசாமி, கீழ்க்கட்டளை, பழைய பல்லாவரம், ஜமீன் ராயப்பேட்டை, தர்கா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம் செய்தார். அவர் கூறும்போது, ‘‘திராவிட கட்சிகள் இல்லாமல் புதிதாக ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புவதை பார்க்க முடிகிறது. பல்லாவரத்தில் குடிநீர் பிரச்சினை, அனகாபுத்தூரில் பட்டா, ஆற்றுப்பாலம் பிரச்சினை, நாகல்கேணி பகுதியில் தோல் தொழிற்சாலை பிரச்சினை என ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பிரச்சினைகள் உள்ளன. பல்லாவரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படவில்லை. மத்திய அரசு உதவியுடன் பல்லாவரத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு ஸ்மார்ட் சிட்டியை நிர்மாணிப்பது என் கனவுத் திட்டம்’’ என்றார்.

கபடி மைதானம் (மதிமுக)

மதிமுக சார்பில் போட்டியிடும் தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் நிறுவனர் கி.வீரலட்சுமி கூறும்போது, ‘‘பொழிச்சலூரில் கபடி விளையாட்டுத் திடல் அமைக்க முயற்சிப்பேன். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை தனியார் மருத்துவமனைக்கு நிகராக சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x