Published : 09 Jun 2022 06:58 AM
Last Updated : 09 Jun 2022 06:58 AM

மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த குறைந்த வட்டியில் கடன் வழங்க ஆட்சியர் அறிவுரை

கிருஷ்ணகிரியில் அனைத்து வங்கிகள் சார்பில் நடந்த கடன் வழங்கும் முகாமில், 1326 பயனாளிகளுக்கு, ரூ.96 கோடி மதிப்பில் கடன்களை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, எம்பி செல்லக்குமார், எம்எல்ஏ பிரகாஷ் ஆகியோர் வழங்கினர்.

கிருஷ்ணகிரி: மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட குறைந்த வட்டியில் கடன் உதவிகள் வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் வங்கி சார்பாக 75-ம் ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நடந்தது. இவ்விழாவில் அனைத்து வங்கிகள் சார்பில் கடன் வழங்கும் முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார்.

எம்பி செல்லக்குமார், ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர் பழனிகுமார், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் சீராளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் வாடிக்கை யாளர்களுக்கு கடன் வழங்கி, சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி, ஆட்சியர் பேசியதாவது:

மாவட்டத்தில் அனைத்து வங்கிகள் பங்குபெற்ற, வாடிக்கை யாளர்கள் தொடர்பு முகாம் மற்றும் கடன் வழங்கும் விழாவில் 1,326 பயனாளிகளுக்கு ரூ.96 கோடி மதிப்பில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு பகுதி தொழிற்சாலைகள் நிறைந்ததாகவும், ஒரு பகுதி வேளாண்மை பகுதியாகவும், ஒருசில பகுதிகள் மிகவும் பின்தங்கிய பகுதியாகவும் உள்ளது. பின்தங்கிய பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்கள் சுய தொழில் புரிந்திட குறைந்த வட்டியில் கடன் உதவிகள் வழங்க வேண்டும்.

குறிப்பாக, 2 ரூபாய், 3 ரூபாய் மற்றும் மீட்டர் வட்டியென தனியாரிடம் கடன் பெற்று கடனிலிருந்து மீளமுடியாமல் இருக்கும் அப்பாவி மக்களை பாதுகாக்கும் வகையில் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்க வேண்டும். இதேபோல், வங்கிகள் கல்வி கடன்களை தகுதியுடையவர்களுக்கு தாமதமின்றி வழங்கி அவர்கள் கல்வி கற்க உதவிட வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் கனரா வங்கியின் மண்டல மேலாளர் ஆனந்த், மகளிர் திட்ட இயக்குநர் ஈஸ்வரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x