Published : 03 May 2016 03:28 PM
Last Updated : 03 May 2016 03:28 PM

குன்னம் தொகுதியில் மாறுபட்ட அணுகுமுறையால் வாக்காளர்களை கவரும் இளைஞர்கள்

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் பெருமளவு கிராமங்களை உள்ளடக்கிய சட்டப்பேரவை தொகுதி குன்னம். இங்கு வேட்பாளர்களாக களமிறங்கும் இளைஞர்கள் சிலர் தங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் வாக்காளர்களைக் கவர்ந்து வருகின்றனர்.

குன்னம் தொகுதி அதிமுக வேட்பாளரும், பெரம்பலூர் மாவட்டச் செயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன், ஆளும் கட்சிக்கான பலத்துடன் தொகுதியில் வலம் வருகிறார். திமுக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் த.துரைராஜ், தொகுதியைச் சேர்ந்த ஒரே வேட்பாளர் என்பதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த இருபெரும் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஈடுகொடுத்து இளைஞர்களான சில புதுமுக வேட்பாளர்களும் உற்சாகமாக தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வெற்றி தோல்வி சாத்தியங்களைப் பற்றி கவலைப்படாத இவர்களின் புதிய பாணி பிரச்சாரம் வாக்காளர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

குன்னம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் ப.அருள்(35), “எனக்கு ஓட்டு போடுகிறீர்களோ இல்லையோ, தயவு செய்து பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள்” என்று, தான் சந்திக்கும் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார். வெயிலின் கடுமையால் மற்ற வேட்பாளர்கள் சோர்வடையும் நேரத்திலும் தனது சோலார் பேனல் பொருத்திய வாகனத்தில் சுறுசுறுப்பாக இவர் தொகுதியைச் சுற்றி வருகிறார்.

மைக், ஸ்பீக்கர் மற்றும் மின் விளக்குகளுக்கு ஜீப்பில் பொருத்திய சூரிய ஒளி மின் தகடுகளைக் கொண்டு சேகரிக்கும் மின்சாரத்தையே பயன்படுத்திக் கொள்கிறார். போகிற இடத்திலும் அவற்றை குறிப்பிட்டு, “இப்படியெல்லாம் மாற்றி யோசிக்கும் வேட்பாளரான எனக்கு வாக்களியுங்கள்” என மறக்காமல் ஓட்டு கேட்கிறார்.

மக்கள் நலக் கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரான ஜெ.முகமது ஷாநவாஸ்(34) போட்டியிடுகிறார். கட்சித்தலைவர் திருமாவளவனின் சொந்த ஊரான அங்கனூர் குன்னம் தொகுதியில் இருப்பதால், விசிகவுக்கு செல்வாக்கான கிராமங்கள் இப்பகுதியில் அதிகம். மேலும், லப்பைக்குடிக்காடு உள்ளிட்ட முஸ்லிம் ஓட்டு வங்கி அதிகமுள்ள பகுதிகளும் இத்தொகுதியில் உள்ளன.

இவற்றுடன் பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி அதை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தும் நவாஸின் அணுகுமுரையும் மக்களைக் கவர்ந்துள்ளது.

இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டி ருந்த அக்கட்சியின் மாவட்ட தலைவரான சி.அசோகன் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு, ஏ.வி.ஆர்.ரகுபதி(35) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரச்சார களத்தில் இவர் கடைசியாகச் சேர்ந்தாலும், தொகுதியில் துடிப்புடன் வலம் வருகிறார்.

வழக்கமான தேர்தல் பிரச்சாரத்துக்கு மாற்றாக புதுமுகங்களாகக் களமிறங்கியுள்ள இந்த இளைஞர்கள் தொகுதி மக்களைக் கவர்வதுடன், பிரதானக் கட்சிகளுக்கு சவால் விடும்வகையிலும் செயல்பட்டு வருகின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x