

சென்னை: மருத்துவமனைகள் பதிவு உரிமம் பெறுவதற்கு ஆக்சிஜன், வென்டிலேட்டர் வசதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளீனிக்குகள், சிறிய அளவிலான மருத்துவ மையங்கள் செயல்படுகின்றன. மருத்துவமனைகள், கிளீனிக்குகள் செயல்பட பதிவு உரிமம் பெறுவது அவசியம் ஆகும்.
அந்த உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அதற்கு விண்ணப்பிக்க அவ்வப்போது அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் தகுதியான 30 ஆயிரம் மருத்துவமனைகள், கிளீனிக்குகளுக்கு பதிவு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 7 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு உரிமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று காலகட்டத்தில் சிறிய அளவிலான மருத்துவமனைகளில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு எழுந்தது. அடிப்படை வசதிகளிலும் குறைபாடு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து பதிவு உரிமம் மற்றும் புதுப்பிப்பதற்கான விதிகளில் சிலவற்றை கட்டாயமாக்கி மருத்துவ சேவைகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்கேற்ப ஆக்சிஜன் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் வென்டிலேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும். அவசர காலங்களில் பயன்படுத்துவற்கான சாய்தள வசதியை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதற்கான இடவசதி இல்லை என்றால், தனி மின் இணைப்புடன் கூடிய மின்தூக்கி வசதியை செய்திருக்க வேண்டும். இந்த வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே பதிவு உரிமம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு உரிமம் பெறாமல் செயல்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பதிவு உரிமம் இல்லாமல் செயல்படும் மருத்துவமனைகளுக்கு முதல்கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.