

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது போன்ற விதிகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா முழுவதும் ஜூன் 8-ம் தேதி (நேற்று) காலை நிலவரப்படி 5,233 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாளைக் காட்டிலும் 41 சதவீதம் அதிகமாகும். கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தைப் பொருத்த வரை பிஏ4 மற்றும் பிஏ5 வகை உருமாற்றமடைந்த வைரஸ்களின் தொற்று கண்டறியப்பட்டுள்ளன. தற்போதைய சூழலை அலட்சியப்படுத்தினால், அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் தினசரி பாதிப்பு 200-ஐ தாண்டும். பெரும்புதூர் ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு கல்வி நிறுவனத்தில் 245 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மீண்டும் கரோனா பாதிப்பு அச்சுறுத்தல் எழும் நிலையைக் கருத்தில் கொண்டு, அனைவரும் முகக்கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியைக் கடைபிடிப்பதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதேபோன்று தடுப்பூசி செலுத்தாதவர்கள் முறையாக அதனை செலுத்திக் கொள்ள வேண்டும்.
பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதையும், அறிகுறிகள் உள்ளவர்களைத் தனிமைப்படுத்துவதையும் உறுதி செய்தல் அவசியம். 2 அல்லது 3 நாள்களுக்கு மேல் அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தக் கூடாது. மற்றவர்களுக்கு தொற்றை பரப்பாமல் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் தீவிர பாதிப்பு இல்லை. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.