Published : 09 Jun 2022 08:05 AM
Last Updated : 09 Jun 2022 08:05 AM
சென்னை: ரயில்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு உடமைகளைக் கொண்டு சென்றால் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவலை ரயில்வே துறை மறுத்துள்ளது.
ரயில்களில் குறிப்பிட்ட அளவைவிட அதிக உடமைகளை (லக்கேஜ்)கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என கடந்த சிலநாட்களாக வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவை மேற்கோள்காட்டி சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ரயில் பயணத்தின்போது உடமைகளை அதிகளவில் பயணிகள் கொண்டு வருகின்றனர். இது உடன் பயணிக்கும் பயணிகளுக்கு அசவுகரியமாக உள்ளது. எனவே, அதிக உடமைகளை ஏற்றிக் கொண்டு ரயிலில் பயணம் செய்ய வேண்டாம். உடமைகள் அதிகமாக இருந்தால் பார்சல் அலுவலகத்தில் அதனை முன்பதிவு செய்து அனுப்ப வேண்டும்.
ரயில்களில் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் உடமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஏசி முதல் வகுப்பில் செல்பவர்கள் 70 கிலோவும், ஏசி 2-வது வகுப்பில் செல்பவர்கள் 50 கிலோவும், ஏசி 3-வது வகுப்பில் செல்பவர்கள் 40 கிலோ வரையிலும் உடமைகளை எடுத்துச் செல்லலாம்.
2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் பயணிப்பவர்கள் 40 கிலோவும், பொது வகுப்பில் பயணிப்பவர்கள் 35 கிலோவும் கொண்டு செல்லலாம். அதற்கு மேல் எடுத்துச் செல்லும் உடமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக உடமைகளுடன் பயணிகள் பயணிப்பதைக் கண்டறிந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இத்தகவலை ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘ரயில்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் உடமைகளைக் கொண்டு சென்றால் அபராதம் விதிப்பது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவுதான் தற்போது நடைமுறையில் உள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் பரவுவதைப் போன்று புதிய உத்தரவு எதுவும் தற்போது பிறப்பிக்கப்படவில்லை’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT