Published : 09 Jun 2022 07:45 AM
Last Updated : 09 Jun 2022 07:45 AM
சென்னை: சென்னை மாநகராட்சியில் மேயர், துணை மேயர், நிலைக்குழுக்கள் பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகியும் அவை தொடர்பான விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்
சென்னை மாநகராட்சி 1688-ம்ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. நிர்வாகரீதியாக பல்வேறு மாற்றங்களைக் கண்ட சென்னை மாநகராட்சிக்கு என தனிச் சட்டம் 1919-ம்ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் நிர்வாகம் ஒழுங்குபடுத்தப்பட்டு, தேர்தல் மூலமாக மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மூலமாக மேயர்களைதேர்ந்தெடுக்கும் நடைமுறை 1933-ம் ஆண்டு அமலுக்கு வந்தது.
அந்தத் தேர்தலின்போது சென்னை மாநகரின் மக்கள் தொகை, 6 லட்சத்து 47 ஆயிரத்து228 பேர். அன்றைய மாநகராட்சியின் பரப்பு 76 சதுர கிமீ. 1933-34-ம்நிதியாண்டில் ரூ.81 லட்சத்து 28 ஆயிரத்து 690 மதிப்பில் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1996-ம் ஆண்டு முதல் முறையாக நேரடியாக மக்களால் மேயரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்மேயர், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். இன்று சென்னை மாநகராட்சி பரப்பு426 சதுர கிமீ ஆக விரிவடைந்துள்ளது.
வார்டுகள் 200 ஆக அதிகரித்துள்ளன. இப்போது மாநகராட்சிக்கு 334 வயது ஆகிறது. பாரம்பரியம் மிக்க சென்னை மாநகராட்சி மேயராக ஆர்.பிரியா, துணை மேயராக மு.மகேஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.
வழக்கமாக அரசுத் துறை இணையதளங்களில் மக்கள் பிரதிநிதிகளின் பெயர், படங்கள் மற்றும் தொடர்பு எண்கள் இடம்பெறும். அது மாநகர பொதுமக்கள் தெரிந்துகொள்ள மட்டுமல்லாது, வெளிநாட்டு அரசுகள், புலம்பெயர் தமிழர்கள் தெரிந்துகொள்ளவும் வசதியாக இருந்தது. ஆனால் சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், நிலைக்குழுக்கள், மாமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகியும், அவர்கள் குறித்தவிவரங்கள், படங்கள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக கேட்டபோது, “உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற மாநகராட்சி அதிகாரிகள், ஏதோ கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் குறித்த பட்டியலை வெளியிடுவது போன்று, மேயர், துணை மேயர், கவுன்சிலர்களின் பெயர், பதவி, தொடர்பு எண்கள் கொண்ட பட்டியலை பதிவேற்றி, கடமையை முடித்துக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT