Published : 07 May 2016 02:12 PM
Last Updated : 07 May 2016 02:12 PM

தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க தடையாக உள்ளவர்கள் வாக்கு கேட்டு வர வேண்டாம்: வீட்டின் முன் துண்டுப்பிரசுரம் ஒட்டிய வாக்காளர்

மக்களுக்கு தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க தடையாக உள்ளவர்கள் வாக்கு கேட்டு வர வேண்டாம் என திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டின் முன் துண்டுப் பிரசுரம் ஒட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், நிர்வாகிகளும் வீடு, வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி கன்டோன்மென்ட் பகுதியிலுள்ள ஸ்டேட் பாங்க் ஆபீசர்ஸ் காலனியில் வசிக்கும் வழக்கறிஞர் அமல் அந்தோணி (30) என்பவர், தனது வீட்டுக்கு வாக்குக்கேட்டு வர வேட்பாளர்களுக்கு நிபந்தனை விதிக்கும் வகையில், முன்புற கதவில் ஒரு துண்டுப் பிரசுரம் ஒட்டியுள்ளார்.

அதில், “தரமான கல்வி, தரமான மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் மக்களுக்கு கிடைக்கக்கூடாது என நினைக்கும் மதிப்புக்குரிய அரசியல் கட்சியினர் என்னிடம் வாக்கு கேட்டு வர வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கேட்டபோது அமல் அந்தோணி கூறியதாவது: தமிழகத்தில் வாழும் மக்களுக்கு பெரும் சுமையாக இருப்பது கல்வி, மருத்துவத்துக்கான செலவுகள்தான். இந்த சுமையைப் போக்கிவிட்டால், மக்கள் தங்களது வருமானத்தைக் கொண்டு, அதன்மூலமே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வர்.

ஆனால், இதைச் செய்ய எந்த அரசியல்வாதியும் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. கல்வியும், மருத்துவமும் சேவை என்ற நிலையில் இருந்து வியாபாரப் பொருளாகிவிட்டன. இதற்கு அரசியல்வாதிகளும் முக்கிய காரணம். எனவே, அதுபோன்ற சிந்தனையுடைய அரசியல்வாதிகள் எனது வீட்டுக்கு வாக்குக்கேட்டு வர வேண்டாம் என எழுதி ஒட்டியுள்ளேன். இதுவரை யாரும் என் வீட்டுக்கு வந்து ஓட்டுக் கேட்கவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x