Published : 30 May 2016 08:04 AM
Last Updated : 30 May 2016 08:04 AM

ஜோலார்பேட்டை, கரூர் அருகே பரபரப்பு: திடீர் தீ விபத்தில் சிக்கி ரயில் பெட்டிகள் எரிந்து நாசம் - ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் யார்டில் நிறுத்தி வைத்திருந்த விரைவு ரயில் பெட்டியில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதேபோல் கரூர் அருகே பயணிகள் ரயிலிலும் நிகழ்ந்த தீ விபத்தால் ரயில் பெட்டிகள் நாசமாகின. இதனால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே கோச் யார்டு உள்ளது. இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் பல்வேறு ரயில் கள் இங்கு நிறுத்தி வைக்கப்படு வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு ஜோலார்பேட் டையில் இருந்து பெங்களூரு செல்லும் சொர்ணா விரைவு ரயில், ஈரோடு செல்லும் பயணிகள் ரயில், சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயில் மற்றும் அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் ஆகியவை யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் ரோந்து சென்ற ஜோலார்பேட்டை டவுன் போலீஸார் சொர்ணா விரைவு ரயிலின் 5-வது பெட்டி தீப்பற்றி எரிவதை பார்த்தனர். இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வீரர்கள் விரைந்து வந்தனர். உயர் அழுத்த மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போராடி ரயில் பெட்டியில் பற்றிய தீயை அணைத்தனர். இதில், ரயில் பெட்டி முற்றிலும் சேதமடைந்தது. அந்த பெட்டி அகற்றப்பட்டது.

தகவலறிந்த சென்னை ரயில்வே உதவி கோட்ட மேலாளர் பிரபாகரன், ஜோலார்பேட்டை ரயில்வே மேலாளர் ராஜா, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விக்டர் தர்மராஜ் ஆகியோர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் காரணமாக ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மின் கசிவால் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வெளியாட்கள் யாராவது தீ வைத்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓடும் ரயிலில் தீ விபத்து

இதேபோல் கரூர் அருகே பயணிகள் ரயிலிலும் தீ விபத்து ஏற்பட்டது. கரூர்-திருச்சி பயணிகள் ரயிலில் முன்புறம், பின்புறம் மட்டுமின்றி, மையப்பகுதியிலும் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ரயில் கரூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று காலை 6.50 மணிக்குப் புறப்பட்டது. பசுபதிபாளையத்தைக் கடந்த போது, மையப்பகுதி இன்ஜினிலி ருந்து புகை வந்துள்ளது.

வீரராக்கியத்தை நெருங்கி யபோது, திடீரென இன்ஜின் அருகே உள்ள பெட்டி தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைய டுத்து, அங்கிருந்த பயணிகள் கூச்சலிட்டபடி, அடுத்த பெட்டிக்கு ஓடினர். ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி, தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தார். அங்கு வந்த கரூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஈரோட்டிலிருந்து வந்த ரயில்வே ஊழியர்கள், தீப்பற்றிய பகுதியைப் பார்வையிட்டு, மீண்டும் ரயிலை இயக்கலாம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, கரூரிலிருந்து மாற்று இன்ஜின் கொண்டுவரப் பட்டு, காலை 10.25 மணிக்கு அந்த ரயில் திருச்சிக்குப் புறப்பட்டது. மின் கசிவால் தீப்பிடித்ததா என்று ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x