

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், கே.எஸ். நரேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
பின்னர், பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு பட்ஜெட்டில் 9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இருந்தாலும், மேகதாதுவில் தடுப்பணையை கட்ட முடியவில்லை. பாஜக அரசு தான் இதற்கு முக்கிய காரணம். தொல். திருமாவளவன் அம்பேத்கர் பெயரை வைத்து அரசியல் செய்கிறார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. டாக்டர் அம்பேத்கர் கனவை பிரதமர் நரேந்திர மோடி தான் நிறைவேற்றி வருகிறார்.
இந்திய பொருளாதாரம் உலக அளவில் 5-ம் இடத்தில் உள்ளது. இதற்கும் பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம். பொருளாதாரத்தில் வலிமையுள்ள நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 இடங்களில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
திமுகவின் ஓராண்டு ஆட்சி தமிழக மக்களுக்கு வேதனை அளிக்கிறது. திமுக தேர்தல் வாக்குறுதிகளை ஆட்சி அமைத்தப்பிறகு மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. சமையல் எரிவாயு விலை, பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. பெண்களுக்கான மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் என பல வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆகவே, விரைவில் மக்கள் திமுகவை வெளியேற்றுவார்கள்.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க பொருட்களை ஆவின் மூலமே வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் மோடியின் உரையை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மியூட் செய்ததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரளாவில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும். வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்களும் வரவேற்கிறோம். எல்லா தலைவர்களையும் மதிக்க வேண்டும் என்பதே பாஜகவில் நிலைபாடு’’ என்றார்.