Last Updated : 08 Jun, 2022 11:01 PM

 

Published : 08 Jun 2022 11:01 PM
Last Updated : 08 Jun 2022 11:01 PM

கோவை | கல்விக்கடன் தொகையை அதிகப்படுத்த பி.ஆர்.நடராஜன் எம்.பி அறிவுறுத்தல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் பேசிய குழுவின் தலைவர் பி.ஆர்.நடராஜன் எம்.பி. அருகில் துணைத் தலைவர் கு.சண்முகசுந்தரம் எம்.பி .உள்ளிட்டோர். |  படம் : ஜெ.மனோகரன்.  

கோவை: மாணவர்களுக்கான கல்விக்கடன் தொகையை வங்கிகள் அதிகப்படுத்த வேண்டும் என வளர்ச்சிக் கூட்டத்தில் குழுவின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் அறிவுறுத்தினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் இன்று (ஜூன் 8) நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினர் தலைவரும், கோவை மக்களவை உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். குழுவின் துணைத் தலைவரும், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினருமான கு.சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு கடன் முகாம்: இக்கூட்டத்தில் குழுவின் தலைவர் பி.ஆர்.நடராஜன் பேசும்போது, ''கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் பணிகளை துரிதப்படுத்தி, உரிய காலத்துக்குள் பணிகளை விரைவாக முடித்திட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடப்பாண்டு கல்விக்கடன், விவசாயக் கடன், சிறு, குறு தொழில் கடன் உள்ளிட்டவைகளுக்காக ரூ.27 ஆயிரத்து 700 கோடி நிர்ணயித்திருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். கரோனா பெருந்தொற்று காலத்தில், அனைத்து தரப்பு மக்களும் பொருளாதாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

எனவே, இம்மாவட்டத்தின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு கூடுதலாக கல்விக் கடன் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, பொருளாதார வசதியின்மையால் மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது.

வங்கிகள் நடப்பாண்டு மாணவர்களுக்கான கல்விக்கடன் தொகையினை அதிகப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் சிறப்புக் கடன் வழங்கும் முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும். கல்விக்கடனை விரைவாக தருவதற்கான உத்தரவாதத்தை அளிக்கும் வகையில் இம்முகாம் இருக்க வேண்டும். கோவை மாநகரில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன. ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இக்கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x