

அரியலூர்: அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தில் கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுமுட்டி சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெங்கனூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 28ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட காளைகளும், காளைகளை பிடிக்க 300 வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை ஆயிரக் கணக்கானோர் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.
அப்போது ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று பார்வையாளரான துங்கபுரம் கிராமத்தை சேர்ந்த இளவரசன்(36) என்பவரை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த இளவரசனுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இது குறித்து இளவரசனின் மனைவி முத்துலட்சுமி (32) வெங்கனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.