Published : 08 Jun 2022 04:22 AM
Last Updated : 08 Jun 2022 04:22 AM
சென்னை: கடலில் மூழ்கித் தவிப்பவர்களை பாதுகாப்பதற்காக, 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவர்களுக்கு `கடற்கரை உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி' அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் 1,076 கி.மீ. நீளமுள்ள கடற்கரைகளை கொண்டுள்ளது. இங்குள்ள 608 மீனவ கிராமங்களில், 10.48 லட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பல அழகிய கடற்கரைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பொழுதுபோக்குக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடற்கரைப் பகுதிகளில் அவ்வப்போது நேரிடும் விபத்துகளால் விலை மதிப்பற்ற மனித உயிர்களை இழக்க நேரிடுகிறது.
இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கவும், கடலில் தவறி விழுந்து மூழ்கித் தவிப்பவர்களை காப்பாற்றும் வகையிலும், மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்காக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன், ரூ.53 லட்சம் மதிப்பில் `ஐடியுஎஸ் ஸ்போர்ட்ஸ் அண்டு சேஃப்டி' என்ற தனியார் நிறுவனம் மூலம், தமிழகத்தில் 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக நேற்று தொடங்கிவைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் 25 மீனவ இளைஞர்களுக்கு இப்பயிற்சி உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி, மீனவ இளைஞர்களின் இயற்கையான நீச்சல் திறனை மேம்படுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்முன், அவர்களுக்குத் தேவையான முதலுதவி அளிப்பதற்கும் உறுதுணையாக அமையும்.
இப்பயிற்சி முடித்தவர்கள் மூலம் அவசர காலங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவும், கடற்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கவும் முடியும்.
பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்களின் சேவையை புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும் பயன்படுத்திக் கொள்ள இயலும். இப்பயிற்சி மூலம், தமிழகத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர்களுக்கு, கடற்கரை பாதுகாப்பு, மீட்புப் பணிகள், கடற்கரை விடுதிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கவும் உதவியாக அமையும்.
தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மீன்வளத் துறைச்செயலர் தெ.சு.ஜவஹர், ஆணையர் கே.சு.பழனிசாமி உள்ளிட்டோரும் கோவளத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஜி.செல்வம் எம்.பி., எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கட்டிட வரைபடங்கள்
தமிழக அரசு நேற்று வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசின் பல்வேறு திட்டங்களின் பயன்கள் பலதரப்பட்ட மக்களையும், மாணவர்களையும் சென்றடையும் வகையில் பொதுப்பணித்துறை தரமான பல கட்டுமானங்களை உருவாக்கி வருகிறது. இக்கட்டிடங்களின் வரைபடம், பயன்பெறும் துறைகளை கலந்தாலோசித்து, தற்போதைய தேவைக்கேற்ப மாற்றி அமைத்து நவீன முகப்புத் தோற்றத்துடன் பொதுவான கட்டமைப்பு பொதுப்பணித் துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசுப் பள்ளி கட்டிடம், ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற பொதுப்பணித்துறையால் கட்டப்பட உள்ள அரசு கட்டிடங்களின் முகப்புத் தோற்ற வரைபடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாணவ, மாணவியர் தங்கும் விடுதி, சார்பதிவாளர் அலுவலகம், நகர் ஊரமைப்பு இயக்குநர் அலுவலகம் ஆகிய கட்டிடங்களின் முகப்பு தோற்ற வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துறை செயலர் தயானந்த் கட்டாரியா, முதன்மை தலைமை பொறியாளர் இரா.விஸ்வநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT