

தனது வேட்புமனு தள்ளுபடி செய்யப் பட்டதை எதிர்த்து தொண்டாமுத்தூர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை கால அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் ஜெயராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக ஏப்ரல் 29-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தேன். மறுநாள் ஏப்ரல் 30-ம் தேதி எனது மனுவில் உள்ள குறைபாடுகளை குறித்த நேரத்துக்குள் நான் நிவர்த்தி செய்யவில்லை எனக் கூறி, எனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இது சட்ட விரோதமானது. எனவே எனது வேட்புமனுவை தள்ளுபடி செய்து கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, எனது பெயரையும் தொண்டாமுத்தூர் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை விடுமுறை கால நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.விமலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு அதிகாரம் 329 பகுதி 15-ன் கீழ், குறிப்பிட்ட சில வழக்குகளில் தேர்தல் ஆணையத்தின் ஆளுமை வரம்புக்குள் நீதிமன்றங்கள் தேவையின்றி தலையிடுவதை தடை செய்கிறது. சட்டப்பிரிவு 229(பி)-க்கு சட்டப்பொருள் விளக்கம் அளித்துள்ள உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வும் தேர்தல் என்ற சொல்லில் அடங்கும் தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த பணிகளான தேர்தல் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு தள்ளுபடி, வெற்றி பெற்ற வேட்பாளர்களை அறிவித்தல் போன்ற எந்தவொரு பணியையும் எதிர்த்து அரசியலமைப்பு சட்டப்பிரிவு 226-ன் கீழ் பரிகாரம் தேட முடியாது என குறிப்பிட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தொடர்பான இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது” எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.