

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பிடிபட்டது குறித்து தமிழக அரசின் பதில் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் அருகே 3 கன்டெய்னர் லாரிகளில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.570 கோடி பிடிபட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் விசாரித்தபோது விஜயவாடாவில் உள்ள ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா வங்கிக்கு ரூ.570 கோடியை கொண்டுசெல்வதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு பெரும் தொகை எங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டது? இந்த அளவு பணத்தை எந்த வங்கியிலாவது வைத் திருக்க முடியுமா? இந்தப் பணம் அதிகாரி களால் முறையாக எண்ணப்பட்டதா? வங்கிப் பணம் என்பது உண்மையானதாக இருந்தால் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்சூரன்ஸ் ஆவணங்கள் எதுவும் இல்லையாம்.
கோடிக்கணக்கில் பணம் கொண்டுசெல்ல எவ்வளவு பாதுகாப்பு இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் உள்ளன. ஆனால், ரூ.570 கோடி கொண்டுசெல்ல லுங்கி அணிந்த காவல்துறையினரை எப்படி அழைத்துச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. வங்கியில் இருந்து பணம் கொண்டுசெல்லப்பட்டது என்றால் கன்டெய்னர் லாரிகளுக்கு சீல் வைக்காதது ஏன்? பணத்தை பகலில் எடுத்துச் செல்லாமல் இரவில் எடுத்துச் சென்றது ஏன்?
திருப்பூரில் பிடிபட்ட பணத்துக்கு 18 மணி நேரம் கழித்தே வங்கி அதிகாரிகள் உரிமை கோருகின்றனர். இந்த தாமதத்துக்கு என்ன காரணம்? இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் யாரும் எந்த விவரமும் தெரிவிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக உண்மைகள் மறைக்கப்பட்டதாக பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதன்பிறகும் அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை அறிய தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
ஆவணங்களை அழிக்க முயற்சி
மின் வாரியத்தில் நிலக்கரி, சூரியசக்தி மின்சாரம் வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் ஜெயலலிதா எந்த பதிலும் சொல்லவில்லை. தற்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் நாகல்சாமி, விதிகளை மீறி தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கியதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அத்துறையின் அமைச்சர், திமுக ஆட்சியில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது என பொத்தாம் பொதுவில் சொல்லிருக்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான ஆவணங்களை அப்புறப் படுத்தி அழிப்பதற்கான செயல்கள் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. தவறு செய்தவர்கள் அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
வாக்களிப்பது கடமை
நாளை (இன்று) வாக்குப்பதிவு நாள். தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நாள். ஜனநாயகத்தையும், மக்கள் நலனையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு திமுகவினருக்கு உள்ளது. வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். பொதுமக்கள் தங்களது வாக்குரிமையை நிலைநாட்ட திமுகவினர் உறுதுணையாக இருக்க வேண்டும். தேர்தல் அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.