

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
2017 செப்டம்பரில் விசாரணை தொடங்கியது. மருத்துவ வல்லுநர் குழு முன்னிலையில்தான் மருத்துவர்களை விசாரிக்க வேண்டும் என்ற அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை ஆணையம் ஏற்கவில்லை.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர், மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. மருத்துவர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, கடந்த ஏப்ரல் 26-ம் தேதி, ஆணையம் விசாரணையை நிறைவு செய்தது.
மொத்தம் 159 பேரிடம் விசாரணை நடத்தியுள்ள ஆணையம், இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆணையத்துக்கு அளிக்கப்பட்டஅவகாசம் வரும் 24-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், இறுதி அறிக்கை சமர்ப்பிக்க மேலும் ஒரு மாதம் 7 நாட்கள் காலஅவகாசம் கேட்டு, அரசுக்கு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. எனவே, அடுத்த மாத இறுதியில் ஆணையம் தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.