

சென்னை: சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து திரிசூலம் புறநகர் மின்சார ரயில் நிலையத்துக்கு பயணிகள் சுலபமாக செல்லும் வகையில் ரூ.80 லட்சம் செலவில் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை, ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் காற்றிலிருந்து குடிநீர் எடுக்கும் இயந்திரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
இதுகுறித்து, ராஜேஷ் சதுர்வேதி மேலும் தெரிவித்ததாவது: சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பொதுதளத்தில் இருந்து நடைமேடை வரை செல்ல 2 நகரும் படிக்கட்டுகள் இம்மாதம் இறுதிக்குள் அமைக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில்நிலையங்களில் கூடுதலாக 36நகரும் படிக்கட்டுகள் அமைக்கதிட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் சில ரயில் நிலையங்களில் பாலூட்டும் அறை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் புது முயற்சியாக காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் நவீன இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம் வளிமண்டல காற்றை குடிநீராக மாற்றுகிறது. இக்குடிநீர் 100 சதவீதம் தூய்மையானது. குடிப்பதற்கு மிகவும் ஆரோக்கியமானது. இவ்வாறு ராஜேஷ் சதுர்வேதி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், கூடுதல் பொது மேலாளர்கள் எஸ்.கே.மகாதேவன், எஸ்.சதீஷ் பிரபு, மேலாளர்கள் பி.லட்சுமி (வருவாய்), கே.எஸ்.அருண் (இயக்கம்), துணை மேலாளர் ஏ.அருள்ராதா (இயக்கம்) மற்றும் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, கோயம்பேடு நிலையத்தில் கூடுதலாக இருசக்கரவாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தையும் ராஜேஷ் சதுர்வேதிதிறந்து வைத்தார். 1,500 ச.மீ்.் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இங்கு கூடுதலாக 800 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.