Published : 08 Jun 2022 06:27 AM
Last Updated : 08 Jun 2022 06:27 AM
மதுரை: சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரையில் பிரச்சாரம் செய்தபோது, கப்பலூர் டோல்கேட் ஆட்சிக்கு வந்ததும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அதை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகிறார்கள்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில் திமுகவின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி ஒத்தக்கடையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஸ்டாலினிடம், கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நேரடியாக முறையிட்டனர்.
அதற்குப் பதில் அளித்த அவர், தமிழகம் முழுவதும் முறையில்லாமல் மத்திய, மாநில அரசுகள் டோல்கேட்கள் அமைத்துள்ளன. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். அவசரத்துக்கு ஆம்புலன்ஸ்கள்கூட செல்ல முடியாமல் டோல்கேட்கள் தமிழகத்தில் உயிர் போகும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததும் டோல்கேட் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றார்.
திமுக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு ஆகி விட்டது. மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் பத்துக்கும் மேற்பட்ட முறை வந்துள்ளார். ஆனால், அவர் வாக்குறுதி அளித்தவாறு கப்பலூர் டோல்கேட்டை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால் தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் கப்பலூர் டோல்கேட் வழியாக ரூ.95 கட்டணம் செலுத்தி செல்கின்றன. அதேபோல் முறையான அடையாள அட்டைகள் காட்டினால் திருமங்கலம் மற்றும் பேரையூர் தாலுகா சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கட்டணம் செலுத்தாமல் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், டோல்கேட் நிர்வாகத்தினர், சலுகை கட்டணத்தில் மாத பாஸ் வாங்குமாறு கிராம மக்களை கட்டாயப்படுத்துகின்றனர். அதனால், கிராம மக்களுக்கும், டோல் கேட் ஊழியர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
இந்நிலையில் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி விதியை செயல்படுத்தி கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களில் மூடப்படும் என்று மத்திய தரை வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி மார்ச் 22-ம் தேதி அறிவித்தார். அவரது கெடு முடிய 22 நாட்கள் மட்டுமே உள்ளன.
இதனிடையே, சுங்கச்சாவடிகளை மூட தொடக்கக்கட்ட பணிகளைக்கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. தமிழக அரசும் மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் தரவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி விதிமீறி அமைந்துள்ள கப்பலூர் டோல்கேட்டை மூடுவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT