

மதுரை மேற்குத் தொகுதியில் அதிமுக சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, திமுக சார்பில் மாநகர் செயலாளர் கோ. தளபதி, மக்கள் நலக் கூட் டணி சார்பில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி மற்றும் பாமக, பாஜக கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் களத்தில் உள்ளனர்.
இவர்களில் மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் உ.வாசுகியின் ஆடம்பரமில்லாத எளிமையான பிரச்சாரம், அப்பகுதி மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. தினமும் பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடி அவர்களுடைய குறைகள், பிரச்சினைகளைக் கேட்டு அவற்றை தீர்த்து வைப்பதாக உறுதியளிப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இவர் பிரச்சாரத்துக்கு திமுக, அதிமுகவினரை போல கூட்டம் சேர்ப்பதில்லை. பேஸ்புக்கில் தினமும் மக்களை சந்தித்த நிகழ்வுகள், அவர்களின் எதிர் பார்ப்பு, தான் சொல்லும் வாக்குறுதிகளை உடனுக்குடன் பதிவு செய்கிறார். இந்த வாக்குறுதிகளில் உண்மையானவற்றை நிறைவேற்ற போராடுவோம் என்றும், மதுரை மாவட்டத்தைப் பாதுகாப்போம் ’ என்ற கோஷத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதும், இந்தத் தொகுதி அதிமுக, திமுக வேட்பாளர்களை கலக்கமடையச் செய்துள்ளது.
உ.வாசுகி 1977-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கடந்த 39 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வருகிறார். வங்கி ஊழியராகப் பணியாற்றிய இவர், 2000-ம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்று கடந்த 16 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக உள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து பல்வேறு போராட் டங்களை நடத்தியவர்.
இவரது தந்தை மறைந்த ஆர். உமாநாத், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இவரது தாய் மறைந்த பாப்பா உமாநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர் இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவராகவும், எம்எல்ஏவாகவும் பணியாற்றியவர். பாரம்பரிய கம்யூனிஸ்ட் குடும்பத்தில் இருந்து உ.வாசுகி போட்டியிடுவதால் கம்யூனிஸ்ட் கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.