

காரைக்குடி: காரைக்குடி நகராட்சியில் அதிமுக வார்டு புறக்கணிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் உதவியோடு கழிவுகளை கவுன்சிலர் அகற் றினார்.
காரைக்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் 7 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த வார்டுகளில் குப்பைகள் அகற்றுதல், குடிநீர் விநியோகம், சாலை சீரமைப்பு போன்றவற்றில் உள்ள பிரச்சினைகளை சரி செய்வதில்லை என அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 27-வது வார்டில் கழிவுநீர் கால்வாயில் இருந்து அள்ளப்பட்ட கழிவுகள், மண் போன்றவை அருகிலேயே கொட்டப்பட்டு அகற்றப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்வதற்கும் நடந்து செல்வோருக்கும் சிரமம் இருந்தது.
இதையடுத்து கழிவுகளை அகற்ற அதிமுக கவுன்சிலர் பிரகாஷ் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
நடவடிக்கை இல்லாத நிலையில் நேற்று பிரகாஷ் அப்பகுதி மக்கள் உதவியுடன் கழிவுகள், குப்பைகளை அகற்றினார்.
இது குறித்து கவுன்சிலர் பிரகாஷ் கூறுகையில், வார்டு குறைகளைத் தீர்க்கதான் கவுன்சிலர்களை மக்கள் தேர்வு செய்தனர். ஆனால் நாங்கள் கூறும் எந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைப்பதில்லை. இதனால், நானே மக்கள் உதவியோடு கழிவுகளை அகற்றி வருகிறேன்,’ என்றார்.