Published : 08 Jun 2022 06:40 AM
Last Updated : 08 Jun 2022 06:40 AM

சாதிச் சான்றிதழ் இல்லாமல் தவிக்கும் ‘பூம்பூம் மாட்டுக்காரர்கள்’

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் துறவிக்காடு எம்ஜிஆர் நகரில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த, ஆதிவாசி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பூம்பூம் மாட்டுக்காரர்கள் 300-க்கும் அதிகமானோர் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி, அங்குள்ள கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால் கரை ஓரத்தில் புறம்போக்கு இடத்தில் குடிசைகள் அமைத்து குடியிருந்து வருகின்றனர்.

இவர்கள் குடியிருக்கும் பகுதியில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிஉள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.

இவர்களில் பெரும்பாலானோர் திருஷ்டி பொம்மைகள் விற்கும் பணியிலும், பறை, டிரம்ஸ் செட் அடிக்கும் பணியிலும், பெண்கள் சாலைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து விற்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்குள்ள குழந்தைகள் சாதிச் சான்றிதழ் இல்லாததால், 8-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல், பெண்கள் சிறுவயதிலேயே திருமணமாகியும், சிறுவர்கள் ஏதாவது கிடைக்கும் வேலைக்கும் சென்றுவிடுகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த நீலகண்டன், மாரியப்பன் ஆகியோர் கூறும்போது, ‘‘அரசு எங்களுக்கு நிலப்பட்டா வழங்கியுள்ளது. ஆனால், இதுவரை இடத்தை அளந்து தரவில்லை. எங்களுக்கு இடத்தை அளந்து, அரசு வீடு கட்டித் தர வேண்டும்.

எங்கள் மூதாதையர்கள் பூம்பூம் மாடு தொழில் செய்து வந்த நிலையில், தற்போது கிடைக்கும் வேலைகளை செய்துவருகிறோம். மேலும் திருஷ்டி பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். நாங்கள் இந்து ஆதியன் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு அரசு உரிய சாதிச் சான்றிதழ் வழங்கினால், எங்கள் குழந்தைகள் மேற்படிப்பு படிக்க உதவியாக இருக்கும்.

எங்கள் குழந்தைகள் வாழ்க்கை சாதிச் சான்றிதழ் இல்லாததால் வீணாகி வருகிறது. 15 வயதிலேயே பெண் குழந்தைகள் திருமணமாகிச் சென்று விடுகின்றனர். ஆண் குழந்தைகள் கூலி வேலைக்குச் சென்று விடுகின்றனர். எங்களுக்கு அரசு சாதிச் சான்றிதழ் வழங்கினால், எங்கள் குழந்தைகள் மேற்படிப்பு படிக்கவும், எங்கள் வாழ்க்கை முன்னேற்றமடையவும் உதவியாக இருக்கும்.

இதேபோல, ஒட்டங்காடு, பட்டுக்கோட்டை, ஆலடிக்குமுளை ஆகிய இடங்களிலும் சாதிச் சான்றிதழ் இல்லாததால், இந்த சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் படிப்பு வீணாகி வருகிறது.

துறவிக்காடு எம்ஜிஆர் நகரில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோருக்கு சிறார் திருமணம் நடைபெற்றுள்ளது’’ என்றார்.

துறவிக்காடு சமூக ஆர்வலரும், பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினருமான எஸ்.செல்வராஜ் கூறும்போது, ‘‘இப்பகுதியில் பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வசித்து வருகின்றனர். போதிய படிப்பறிவு இல்லாத நிலையில், இளம் வயது திருமணம், குழந்தை தொழிலாளர்கள் என்பது அதிகரித்து வருகிறது.

எனவே, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இதுகுறித்து ஆய்வு செய்து, இந்த சமூக மக்களுக்கு உரிய சாதிச் சான்றிதழ் வழங்கவும், குடியிருக்க வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x