

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கூம்பில்லா சிங்கன், மலைவாழை உட்பட பாரம்பரியமிக்க அழியும் தருவாயி்ல உள்ள 31 அரிய வாழை ரகங்களை மீட்டெடுக்கும் வகையில் சுற்றுச்சூழல் பூங்காவில் நட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின்கீழ் கன்னியாகுமரி அரசு பழத்தோட்ட சுற்றுச்சூழல் பூங்கா வளாகத்தில் அரிய வகையான வாழைக்கன்றுகள் நடவு செய்யப்பட்டிருந்ததை தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர்செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் இருந்த நிலையில், சில இனங்கள் அழிந்துவிட்டன. இன்னும் ஒரு சில இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன.
இத்தகைய 31 ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு, கன்னியாகுமரியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவின் பண்ணை சுற்றுலா பகுதியில் செம்மட்டி, கரும்மட்டி, கூம்பில்லா சிங்கன், பூங்கதலி, மட்டி, கற்பூரவல்லி, ஆயிரம்காய்ச்சி, மலைவாழை, நெய்பூவன், சிங்கன், பாளையன்கோட்டை, படத்தி, இரசகதலி, மொந்தன் வாழை, நாட்டுப்பேயன், சக்கைப்பேயன், வெள்ளைத் தொழுவன், செந்தொழுவன், நேந்திரன், நெய்க்கதலி போன்ற வாழை ரகக்கன்றுகளை கடந்த ஆண்டு ஜூன் 20-ம் தேதி அன்று நடும் பணியை தொடங்கி வைத்தேன்.
மேலும் 11 வாழை இரகங்களான கூம்பில்லா வாழை, திண்டுக்கல் சிறுமலை, கண்ணில் துளுவன், இந்தோனேசியா, மலைமட்டி, கருந்துளுவன், நெய் சிங்கன், தேன் மட்டி, பப்ளு, காவேரி கண்ணன், சிஓ-2 போன்றவை நடப்பட்டு தோட்டக்கலைத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. பல இனங்கள் குலைதள்ளி வாழைக்காய்கள் காய்த்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். இந்த 31 வகை வாழை ரகங்களின் கன்றுகளை விவசாயிகளுக்கு அதிகளவில் வழங்கி நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதேபோன்ற, மா மற்றும் பலா வகைகளில் பல்வேறு வகைகளைக் கண்டறிந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடவுசெய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மேயர் மகேஷ், தோடக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜனஸ் மைக்கேல், நாகர்கோவில் மாநகர துணை மேயர் மேரி பிரின்சி லதா, உதவி இயக்குநர்கள் சரண்யா, ஆறுமுகம் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.